அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தின் வழியாக பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. இந்தப் பகுதி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். நேற்று மாலை 4 மணி அளவில் துப்ரி பகுதியில் இருந்து ஹத்சிங்கி மரிநோக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சென்று கொண்டு இருந்தது.
அதில் குழந்தைகள் பெண்கள் என 250 முதல் 300 பயணிகள் வரை இருந்தனர். ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. இதில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த 25 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் படகு கவிழ்ந்தது பற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. உள்ளூர் தீயணைப்பு படையினர் போலீசாருடன் இணைந்து படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதந்தது. உடனடியாக 37 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது. இன்று காலை வரை 103 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், படகில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் தடுப்பு படை பிரிவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. படகில் 300 பேர் வரை பயணம் செய்துள்ளனர். 25 பேர் மட்டுமே உயிருடன் திரும்பியுள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று மாவட்ட துணை கமிஷனர் குமுசந்திரக கவிதா கூறினார். படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்து பற்றி விசாரணை நடத்த மாநில முதல்-மந்திரி அருண் கோகாய் உத்தவிட்டுள்ளார். இந்த விபத்து நடந்த அதே நேரத்தில் ஜாலேஸ்வர் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற மற்றொரு படகும் கவிழ்ந்தது. இதில் 12 பேர் பலியானர்கள். இந்தப்பகுதியில் சூறாவளியுடன் மோசமான வானிலை நிலவுவதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதை கவனிக்காமல் சென்றதால் இந்த கோர சம்பவம் நடந்ததாக மாவட்ட துணை கமிஷனர் கவிதா கூறினார்.
No comments:
Post a Comment