ஐ.ஐ.டி தேர்வில் 12 வயது சிறுவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம் பகோராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்நாத்சிங். ஏழை விவசாயி.
இவரது மகன் சத்யம்குமார். 1999-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி பிறந்தவன். தற்போது இவனுக்கு 12 வயது முடிந்து 9 மாதங்கள் ஆகின்றன. சமீபத்தில் அகில இந்திய அளவில் நடந்த ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் இவன் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை படைத்தான். அகில இந்திய அளவில் 8,137-வது ‘ரேங்க்’ எடுத்துள்ளான்.
மும்பை மண்டலத்தில் இருந்து ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேர தகுதி பெற்றுள்ள இவன் +2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான். குழந்தை பருவத்தில் இருந்தே தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வந்தான். எனவே சிறு வயதிலேயே அவன் பாட்னாவில் உள்ள சென்ட்ரல் பப்ளிக் ஸ்கூலில் 9-ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் பாதியிலேயே படிப்பை நிறுத்தினான்.
அதே சமயம் ராஜஸ்தான் சென்று கோடா என்ற இடத்தில் செயல்படும் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தான். இவனது திறமையை அறிந்த கோச்சிங் சென்டரின் இயக்குனர் ஆர்.கே. வர்மா, பண உதவி செய்தார். இதையடுத்து, அங்குள்ள பள்ளியில் மீண்டும் 9-ம் வகுப்பில் சேர்ந்தான். 10-ம் வகுப்புவரை படித்தான்.
பின்னர் மும்பை மண்டலத்தில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்தான். பிளஸ்-2 தேர்வு எழுதிய கையோடு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் எழுதினான். மிகவும் கடினமான இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். தற்போது பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான்.
இதுபற்றி சிறுவன் சத்யம்குமார் கூறுகையில், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் குறைவான ரேங்க் பெற்றிருப்பதால், இந்தாண்டு ஐ.ஐ.டி.யில் சேரமுடியாது.
எனவே, அடுத்த ஆண்டு இதே தேர்வை மீண்டும் எழுதி நல்ல ‘ரேங்க்’ எடுக்க முயற்சி செய்வேன். ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளேன் என்றான்.
சிறுவன் சத்யம்குமார் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் வெற்றி பெற்றதை அவனது கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

No comments:
Post a Comment