இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் 3-ம் ஆண்டு நினைவு நாள் லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் கண்ணீர் அஞ்சலியுடன் கடைபிடிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
30 ஆண்டுகளாக அங்கு நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனை வெற்றி விழாவாக இலங்கை அரசும், ராணுவமும் நேற்று கொண்டாடின. அதே வேளையில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18-ந்தேதியை தமிழின அழிப்பு நாளாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஜெனீவாவில் ஐ.நா. சபை முன்பு அமைக்கப்பட்ட முருகதாசன் திடலில் நடத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சமாதி முன்பு இந்த நிழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கவிதாஞ்சலி மற்றும் சியோன் நகர சிறுவர்களின் நாட்டியம் மற்றும் உரை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
பின்னர் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞர் மீனா கந்தசாமி, சுவிட்சர்லாந்தின் ஈழ தமிழரவை மாநில பிரதிநிதி அன்னா அனோர், மே 17 இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சிவலோகநாதன் ஆகியோர் பேசினார்கள்.
இதேபோன்று லண்டனிலும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி மிகவும் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது. நிகழச்சியில் சுடரை ஈழ போராளி முருகதாசின் தாயார் திருமதி வர்ணகுல சிங்கம் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசிய கொடியை இங்கிலாந்து தமிழர் ஒன்றியத்தை சேர்ந்த மாறன் ஏற்றி வைத்தார்.
பின்னர் முள்ளி வாய்க்கால் போரில் உயிர் தியாகம் செய்த விடுதலைபுலிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரனின் உரை திரையில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

No comments:
Post a Comment