தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சேர்வதற்கு பிளஸ்-2 மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்தி தேர்வு செய்ய உள்ளது.
அதன்படி அதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 11-ந்தேதி முதல் சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றுச் செல்கிறார்கள். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான உடன் இணையதளத்தில் இருந்து மார்க் பட்டியல் நகல் எடுத்து அதை சேர்த்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களுடன் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி அந்த தேதி ஜூன் மாதம் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் விண்ணப்ப படிவங்கள் மே மாதம் 31-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 45 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. இந்தவருடம் மேலும் புதிதாக கல்லூரிகள் தொடங்க உள்ளதால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பி.இ. சேர இடம் கிடைக்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment