சட்ட விரோத சுரங்கத் தொழிலுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் 8 மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதல்- மந்திரி பதவியை எடியூரப்பா இழந்தார். புதிய முதல்- மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார்.
லோக்ஆயுக்தா அமைப்பில் சிறை தண்டனை பெற்ற எடியூரப்பா, ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்-மந்திரியாக பல தடவை முயற்சி செய்தார். பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளும் தோல்விலேயே முடிந்தன. இதனால் அவர் கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் எடியூரப்பா மீதான சட்ட விரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது எடியூரப்பாவை ஆவேசப்படுத்தியது.
பா.ஜ.க. தலைவர்கள் யாரும் தன்னை காப்பாற்ற முன்வரவில்லை என்று வேதனைப்பட்டார். பெங்களூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா தன் குமுறல்களை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், காங்கிரசில் மூத்த தலைவர் யாராவது பாதிக்கப்பட்டால் சோனியா நேரயாக உதவுகிறார். கட்சியும் உதவிக்கு முன்வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார்கள். இதற்காக சோனியாவை பாராட்டுகிறேன் என்றார்.
எடியூரப்பாவின் இந்த பேச்சு கர்நாடக பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து எடியூரப்பாவை சமரசப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. மந்திரிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் முதல்- மந்திரி சதானந்த கவுடா அவமதித்து வருவதாக எடியூரப்பா ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சதானந்தா கவுடா தொடர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி 9 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவி விலக முன் வந்துள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எடியூரப்பா இன்று காலை தன் ஆதரவு மந்திரிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்பதில் எடியூரப்பா ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல தடவை எடியூரப்பா இது மாதிரி போர்க்கொடி உயர்த்தி விட்டு பிறகு சமரசம் ஆகி உள்ளார்.
இந்த தடவையும் அவரை சமரசம் செய்ய கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தடவை எடியூரப்பா சமரசம் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர் இன்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவை அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment