நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் அவருடன் இருக்கிறார் என்று ஜெயேந்திரர் கூறி இருந்தார்.
இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார்.
ரஞ்சிதாவும் ஜெயேந்திரர் கருத்தை கண்டித்து எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
நான் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறேன். நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டு உள்ளேன்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்தியானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இது எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு, சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னைப்பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு இன்று (14.05.2012) விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு ரஞ்சிதா இன்று ஆஜரானார். கோர்ட்டு கூண்டில் ஏறி நின்று மாஜிஸ்திரேட்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்பு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே சமாதானமாக வந்தால் ஏற்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, இப்போது நான் அவதூறு வழக்கு போட்டுள்ளேன். அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் பிறகு யோசிக்கலாம் என்றார். ரஞ்சிதாவுடன் அவரது வக்கீல் முருகையன் பாபு வந்திருந்தார்.
16-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரருக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment