அமெரிக்கப் பெண் ஜோஹல் ஹமீதிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான். அப்போது நான் குடிபோதையில் இருந்ததும் உண்மைதான் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக போலீஸாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த தினத்தன்று தான் குடிபோதையில் இருந்ததாகவும், ஜோஹல் ஹமீதின் அறைக்குத் தேவையில்லாமல் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் தவறு செய்தது உண்மைதான் என்றும் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டி முடி்வடைந்த பின்னர் நடந்த மது பார்ட்டியின்போதுதான் போமர்ஸ்பேக் இப்படி தவறாக நடந்து கொண்ட சம்பவம் இடம் பெற்றது. இதுதொடர்பாக ஜோஹல் ஹமீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கிரிக்கெட் வீரர் போமர்ஸ்பேக் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னைக் காப்பாற்ற முயன்ற காதலர் ஷஹீல் பீர்ஸாதாவை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார் ஜோஹல் ஹமீத்.
இதையடுத்து போமர்ஸ்பேக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment