ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை மாதம் முதல் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் இதுவரை எந்த கட்சியிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி இருவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களது பெயர் பரிசீலிக்கப்பட வில்லை. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை ஜனாதிபதி ஆக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீராகுமார் எல்லா கட்சித் தலைவர்களிடமும் நன்கு பழகி வருபவர். தலித் இனத்தைச் சேர்ந்த மூத்த பெண் தலைவர் என்ற சிறப்பும் மீராகுமாருக்கு உண்டு. எனவே அவருக்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காது என்று மன்மோகன்சிங் கருதுகிறார். இதனால் மீராகுமார் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப் பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கினால் அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒரு அனுபவ சாலியை மத்திய அரசு இழக்க வேண்டியதிருக்கும். மீராகுமாரை ஜனாதிபதி யாக்கும் பட்சத்தில் இந்த பிரச்சினைகள் வராது என்று கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் கின் விருப்பம் குறித்து சோனியா இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 22-ந்தேதி முடிகிறது. அதன் பிறகு எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். ஜனாதிபதியை ஏகமனதாக தேர்ந்தெடுக்க சோனியா நினைக்கிறார். இந்த மாத இறுதியில் அவர் மற்ற கட்சிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தையை பொறுத்தே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புதிய சூழ்நிலைகள் உருவாகும்.
No comments:
Post a Comment