சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி துவக்க விழா பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பழனி எம்.எல்.ஏ. வேணுகோபால், அரசு முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, பழனி நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோடை விழாவினை துவக்கி வைத்து தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 2023ம் ஆண்டு தொலை நோக்குத் திட்டம் மூலம் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் படிப்படியாக குறையும். சுற்றுலா நகரங்களான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் மலைப்பகுதியான கொடைக்கானல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய மாநில அரசுகளின் மூலம் மெகா டூரிசம் திட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் கொடைக்கானலும் இணைக்கப்படும். கொடைக்கானலில் பார்க்கிங் பிரச்சனையை தீர்க்க தற்காலிகமாக கொடைக்கானல் அரசு போக்குவரத்துக்கழகம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நகரப் பகுதிகளில் கடும் மின் வெட்டு காரணமாக குளிர் பிரதேசமான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் போது அங்கும் தினசரி பல மணி நேரம் மின் வெட்டு இருந்ததால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment