நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.
ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment