தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இந்த தொகுதியில் எங்களது கூட்டணி கட்சியான தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தி.மு.க. அறிவித்துள்ளதால் கூட்டணி கட்சி தொகுதி என்பதால் நாங்களும் அங்கு போட்டியிடவில்லை.
கே:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனியாக நிற்கிறதே? காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டால் ஆதரவு கொடுக்கப்படுமா?
ப:- இதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்க முடியும். கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்பதால் மேலிடத்தில் கேட்டுதான் முடிவு எடுக்க முடியும்.
கே:- அ.தி.மு.க.வுக்கு எதிராக புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் இல்லையே?
ப:- அந்த சூழ்நிலை உருவாகவில்லை. நாங்கள் எடுத்துள்ள முடிவு தற்காலிக முடிவு. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் நாங்கள் இப்போது அங்கு போட்டியிடவில்லை.
கே:- உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக ‘டெசோ’ அமைப்பு ஆரம்பித்துள்ளதால் கூட்டணி உறவு பாதிக்குமா?
ப:- இதனால் தி.மு.க. -காங்கிரஸ் உறவு பாதிக்காது. இலங்கை பிரச்சினையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பதை கைவிடவேண்டும் என்று இங்குள்ள தலைவர்களை கெஞ்சி கேட்கிறேன். ஏனென்றால் இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேகமாக ராஜபக்சே அரசு செய்து வருகிறது.
தனி ஈழம் கோரிக்கை மீண்டும் வலுப்பெறும்போது அது தமிழர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்காது என்பதுதான் எனது கருத்தாகும். தமிழர்களுக்கு பாதகமாகத்தான் இந்த கோரிக்கை அமைகிறது.
கே:- சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாராட்டி பேசி உள்ளார்களே?
ப:- அவர்கள் எந்த பிரச்சினைக்காக பாராட்டி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எதிர்க்கட்சியினர் முழுமையாக பேச அங்கு அனுமதிப்பதில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ. பேச ஆரம்பிக்கும் போதே 4 அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுகிறார்கள். இது நல்ல நிர்வாகத்துக்கு இடையூறாகத்தான் அமையும். ஆட்சியின் குறைபாடு முதல்-அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். குற்றம் குறைகளை அறிய முடியாது.
மாவட்ட நிர்வாகங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகள் கொஞ்ச நாளாவது நீடிக்க வேண்டும். அடிக்கடி அவர்கள் மாற்றப்படுவதால் சட்டம்- ஒழுங்கை செம்மையாக கவனிக்க முடியாது. எனவே ஆளும் கட்சியின் தவறை சுட்டிக் காட்டும் வகையில் காங்கிரசார் பேசுவார்கள். தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
கே:- கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி தமிழகத்திற்கு முழுமையாக கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துவீர்களா?
ப:- கூடங்குளம் அணுமின் உற்பத்தியில் 925 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு தருவதாக ஏற்கனவே கூறி உள்ளது. மேலும் மின்சாரம் தருவது பற்றி பிரதமர் முடிவெடுப்பார். நான் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைக்க சுசில் ஹிண்டேவிடம் பேசி உள்ளேன்.
வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத சூழலில் மின்பாதைகள் மோசமாக உள்ளன. அவற்றை சரி செய்து தருமாறு கேட்டுள்ளேன்.
கே:- தமிழகத்துக்கு நிதி உதவி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக சட்டசபையில் குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்களே?
ப:- மத்திய அரசு தேவையான உதவிகளை தமிழகத்துக்கு வழங்கி கொண்டுதான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குறை சொல்லக்கூடாது.
இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறினார்.

No comments:
Post a Comment