புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு வழங்கும் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், தா.பாண்டியனுக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால், அங்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்யிடவில்லை.
அதே நேரத்தில் இங்கு போட்டியிடப் போவது போல பாவ்லா காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.
அதே போல திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் போட்டியிட மாட்டோம் என அறிவித்துவிட்டன. ஆனால், அதிமுகவை எதிர்த்து நிற்பது என்று முடிவெடுத்து, களத்தில் குதிக்கவுள்ளது தேமுதிக.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை தொடங்கி தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளார்.
இந் நி்லையில் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், கேட்கும் கட்சியை பொறுத்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தானாகவே சென்று திமுகவின் ஆதரவு கேட்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திமுகவே முன் வந்து ஆதரித்தால், அதை வரவேற்று ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேமுதிகவுக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட பொது வேட்பாளர் அந்தஸ்து தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. இதனால் அந்தக் கட்சியின் வேட்பாளரை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கூடவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற விஜயகாந்த் தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment