ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததால் அந்தக் கட்சியால் எந்த வேட்பாளரையும் நிறுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், தனது கூட்டணிக் கட்சிகளையும் நடுநிலையாக உள்ள பிற கட்சிகளையும் வேகமாக வளைத்து வருகிறது காங்கிரஸ்.
இதனால் காங்கிரஸ் கட்சி நிறுத்தும் அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜி தான் அடுத்த ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜனாதிபதியாகும் தகுதி துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு இல்லை, பிரணாப் முகர்ஜி ஒரு அரசியல்வாதி.. இதனால் அவரை ஆதரிக்க மாட்டோம் என பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுஷ்மாவின் பேச்சு அவரது சொந்தக் கருத்து, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஷரத் யாதவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறிவிட்டனர்.
மேலும் பெரும்பான்மையான கட்சிகளால் ஏற்கப்படும் வேட்பாளரை ஆதரிப்போம் என்றும் ஷரத் யாதவ் கூறியுள்ளார். இது சுஷ்மா சொன்ன, ''காங்கிரஸ் வேட்பாளரை ஏற்க மாட்டோம், அன்சாரியை ஏற்க மாட்டோம்'' என்ற கருத்துக்கு எதிராக உள்ளது. இதனால் தான் சொன்னதை திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு பாஜக தலைமை தள்ளப்பட்டுள்ளது.
அதே போல பாஜக கூட்டணியைச் சேர்ந்த இன்னொரு கட்சியான அகாலிதளம், அதன் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பாதலுக்கு அவரது கட்சியைத் தவிர வேறு யாருடைய ஆதரவும் இல்லை. இதனால் பாஜக பெரும் குழப்பத்தில் உள்ளது.
இந்த விஷயம் குறித்து விரைவில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கப் போவதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். முதலில் கூட்டத்தை நடத்தி ஆலோசித்துவிட்டுத் தானே இந்த விஷயத்தில் சுஷ்மா மூலம் கருத்தே தெரிவித்திருக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கூறுவதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் குழம்பித் தவித்த காங்கிரஸ் தலைமை மிக வேகமாக செயல்பட்டு தனது வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட ஆரம்பித்துவிட்டது.
முதலில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரணாப் அல்லது அன்சாரிக்கு ஆதரவு கோரியது. கருணாநிதியோ இடதுசாரித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்தலாம் என்று கூறிவிட்டு, சோனியா யாரை நிறுத்தினாலும் ஆதரிக்கத் தயார் என்று அறிவித்துவிட்டார்.
அதே போல தேசியவாத கட்சியின் தலைவரான சரத் பவாரும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஓ.கே. சொல்லிவிட்டார்.
எந்தக் கூட்டணியையும் சாராத சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் அல்லது முஸ்லீம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அன்சாரியை காங்கிரஸ் நிறுத்தினாலும் அவரது ஆதரவு கிடைக்கும் என்றெ தெரிகிறது.
அதே போல ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரான லாலு பிரசாத் யாதவ், அன்சாரிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். அன்சாரி அல்லாமல் பிரணாப் நிறுத்தப்பட்டாலும் அவர் ஆதரிப்பார்.
அன்சாரியை பாஜக எதிர்ப்பதால், அவரை ஆதரிக்க இடதுசாரிகளும் தயாராவார்கள் என்றே தெரிகிறது. இதே நிலையை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் எடுக்கும் என்று தெரிகிறது.
ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறார்.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா பாஜக எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரிக்கத் தயாராக உள்ளார். இந்த விஷயத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் தொடர்பில் இருக்கிறார். நவீன் பட்நாயக்கின் ஆதரவைப் பெறவும் ஜெயலலிதா-மோடி முயல்வார்கள் என்று தெரிகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்தாலும் இடதுசாரிகள்- முலாயம்- மம்தாவின் ஆதரவு இல்லாமல் இவர்களால் ஏதும் செய்விட முடியாது.
இப்போது காங்கிரசுக்கு சிக்கலாக இருப்பது மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மட்டுமே. அவருடன் சோனியா இரு முறை இது தொடர்பாக பேச்சு நடத்திவிட்டார். அவர் தனது மாநிலத்துக்கு அதிக நிதியைக் கோருகிறார். இது தொடர்பான உத்தரவாதம் தரப்பட்டுவிடும் என்று தெரிவதால், அவரது ஆதரவும் காங்கிரஸ் வேட்பாளருக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியை ஜனாதியாக ஏற்க மண்ணின் மைந்தன் என்ற நிலையில் மம்தா தாயாராவே உள்ளதாகத் தெரிகிறது.
மம்தாவின் நிதி கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவரை சந்திக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் முன் வந்துள்ளார். இன்று இருவரும் சந்தித்துப் பேசும்போது அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து கிட்டத்தட்ட முடிவாகி என்று தெரிகிறது.
காங்கிரசுக்கு இப்போதுள்ள ஒரு பிரச்சனை அன்சாரியா அல்லது பிரணாப் முகர்ஜியா என்பது தான். மற்றபடி அடுத்த ஜனாதிபதியை அந்தக் கட்சி தான் முடிவு செய்யப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், பாஜகவுக்கு இந்த விஷயத்தில் எல்லாமே பிரச்சனையாக உள்ளது.
No comments:
Post a Comment