மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியையும் மேலும் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார் நித்யானந்தா.
இந்நிலையில் மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
இதுகுறித்து ஆதீனங்களிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த ஆதீனங்களும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலையில் தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை விதிமுறைகளை மீறி நியமித்தது குறித்து ஆதீனங்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதீனங்களின் ஒன்று திரண்ட அணிவகுப்பு மதுரை ஆதீன செயல்களுக்கு கடும் எதிர்ப்பாகவே இருக்கும் என ஆன்மீக அன்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment