காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி தலைமையிலான ஆட்சி தொடங்கி 3 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பிரதமர் தலைமையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த விருந்துக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி இந்த விருந்தில் கலந்துகொள்ள இயலாது என கூறியிருக்கிறார். தமக்கு உடல்நிலை சரியில்லாததால் டெல்லி வரை பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து மம்தா காரணம் ஏதும் கூறவில்லை.
இந்நிலையில், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் இதுகுறித்து கூறுகையில்:
இன்றைய விருந்துக்கு மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னரே முடிவு செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இந்த விருந்தில் அவர் கலந்து கொள்ள இயலாது என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு இருந்து வருவதும் மேற்குவங்கத்துக்கு மாநில மேம்பாட்டுக்காக கோரப்பட்ட நிதி இதுவரை ஒதுக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தங்களது பிரதிநிதிகள் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருந்தின்போது மூன்று வருட சாதனை அறிக்கை ஒன்று வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment