செப்டம்பர்
27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்
இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்
உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை.
சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார்,
என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று
நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே
நபர் ஜெயசிம்ஹா!
ஜெயலலிதா
அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையின்
டி.ஐ.ஜி-யான
அவரை நேரில் சந்தித்தோம்.
''பரப்பன
அக்ரஹாரா சிறையில் மொத்தம் எத்தனை பெண்
கைதிகள் இருக்கிறார்கள்?''
''விசாரணைக்
கைதிகள் 89 பேர். குற்றம் நிரூபிக்கப்பட்ட
கைதிகள் 46 பேர். மொத்தம் 135 கைதிகள்
இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரும்
அடக்கம். கர்நாடக மாநிலத்திலேயே அதிக
அளவு பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இதுதான்.''
''எப்படி
இருக்கிறார் ஜெயலலிதா?''
''அவர்
மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர்,
பிரஷர் சீராக இருக்கிறது. 24 மணி
நேரமும் சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு
அலார்ட்டாக இருக்கிறது. 28-ம் தேதி ஒருநாள்
மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர்
அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில்
இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன்
பிறகு சிறை வளாகத்தில் உள்ள
டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள்.
அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை ஆறு மணிக்கு
அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை
ஆறு மணிக்கு அந்த அறையை
அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும்
அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆனாலும் அதிக தூரம் அவர்
நடப்பதில்லை.''
''என்ன
சாப்பிடுகிறார்?''
''பெரும்பாலும்
பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான்
சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து
உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று
நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து
உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட
ஆரம்பித்துவிட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில்
விதவிதமான காலை உணவுகளை கர்நாடக
அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை
உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம்,
புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள்
புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம்,
ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக
நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை
உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.''
''ஜெயிலுக்குள்
ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளதா?''
''அப்படி
எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி
கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ
அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக்
கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை.
அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை
அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை
8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப்
பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும்
வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக
வாசிக்கிறார்.''
''பார்வையாளர்கள்
யாரையாவது ஜெயலலிதா சந்தித்தாரா?''
''ஜெயலலிதா
அவரைச் சந்தித்தார்... இவரைச் சந்தித்தார் என்று
யூகமாக பல செய்திகள் வெளி
வருகின்றன. ஆண்டவன் மீது சத்தியமாகச்
சொல்கிறேன்... உள்ளே வந்ததில் இருந்து
இதுவரை அவர் பார்வையாளர்கள் யாரையும்
சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க
விரும்பி மனு போடும் அனைவரின்
பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம்.
வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பலை!’
என்று சொல்லிவிடுகிறார். சசிகலா, இளவரசி ஆகிய
இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும்,
இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி
இருக்கிறார்கள். மாலை ஆறு மணி
ஆனதும் மூவரையும் தனித்தனி அறையில்
அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச்
சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால்,
இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ
வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும்
நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை
அவர் சந்திக்கிறார்.''
''உங்களிடம்
ஜெயலலிதா பேசினாரா?''
''நான்
தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது
ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி
இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில்
இருந்ததைவிட இங்கே நான் நன்றாக
இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும்
இல்லை. என் உடல் ஆரோக்யமாக
இருக்கிறது’ என்று சொன்னார்.
''ஜெயலலிதா,
சிறைக்குள் ஸ்பெஷலான ஓர் அறைக்கு மாற்றப்பட்டதாகவும்,
அங்கே ஏ.சி உட்பட
பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகிறதே?''
''அத்தனையும்
தவறான தகவல்கள். 27-ம் தேதி அவர்
எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே
அறையில்தான் இப்போதும் இருக்கிறார். இந்தியாவில் எந்த ஜெயிலிலும் ஏ.சி கிடையாது. அப்படியிருக்க
இங்கே மட்டும் எப்படி ஏ.சி இருக்கும்?''
-வீ.கே.ரமேஷ்
நன்றி - விகடன்
நன்றி - விகடன்
No comments:
Post a Comment