Friday, October 10, 2014

பிரபலங்களுடன் சல்லாபம் செய்து மிரட்டி பணம் பறித்ததாக நடிகை கைது

பிரபலங்களுடன் சல்லாபம் செய்து, மிரட்டி பணம் பறித்ததாக கன்னட நடிகை கைது செய்யப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னட நடிகை நயனா

கன்னட நடிகை நயனா கிருஷ்ணா. பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்த அவர், ‘கோட்லலாப்போ காய்என்ற கன்னடப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார். ஆனால் இந்தப் படம் வெற்றி அடையவில்லை. புதிய படங்கள் வந்து சேராத நிலையில், வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு திட்டமிட்டதாக தெரிகிறது.

இதற்காக அவர் சக நடிகைகளும் தனது தோழிகளுமான ரிஹானா, மேகனா மற்றும் ஹேமந்த் குமார், சுனில் குமார், மல்லேஷ், ரகு உள்ளிட்டவர்களுடன் கூடி ஆலோசனை நடத்தி, திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

சதித்திட்டம்

அதாவது, டாக்டர்கள், என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு துறை பிரபலங்களை நாடுவது, அவர்களுக்கு நடிகைகளை காட்டி வலை வீசுவது, அவர்கள் சல்லாபத்தில் ஈடுபடுகிறபோது அதை ரகசியமாக படம் எடுப்பது, பின்னர் அந்தப் படத்தை வெளியிடப்போவதாக சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ஆளுக்கேற்ப பணம் பறிப்பது என்பதே திட்டம்.

இந்த திட்டத்தை அவர்கள் ஓசைப்படாமல் அரங்கேற்றி வந்துள்ளனர்.

வீழ்ந்தார் டாக்டர்

இந்த நிலையில், பெங்களூர் சுந்தர்ராம் நகரை சேர்ந்த 68 வயது டாக்டரை நாடினர். அந்த டாக்டரிடம் நடிகை ரிஹானா அனுப்பி வைக்கப்பட்டார். நடிகை என்றதும், டாக்டரும் அவரது வலையில் வீழ்ந்தார். இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்ட காட்சி, நைசாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகை நயனா, தனது கும்பலைக்கொண்டு டாக்டரை மிரட்டினாராம்.

ரூ.1 கோடி

நீங்கள் நடிகையுடன் சல்லாபம் செய்த காட்சியை படம் எடுத்து இருக்கிறோம். நீங்கள் 1 கோடி ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறோம். பணத்தை தருகிறீர்களா அல்லது படத்தை செய்தி சேனல்களுக்கு கொடுத்து வெளியிட சொல்லவா?” என கேட்டனர்.

டாக்டர் பதைபதைத்துப்போனார். அவர்களுடன் அவர் பேரம் பேசினார். 10 லட்சம் ரூபாய் தருவது என முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தார். மீதி 9 லட்சம் ரூபாயை தருவதற்கு நாளும், நேரமும் குறிக்கப்பட்டது.

கையும், களவுமாக

இதற்கிடையே டாக்டர், நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசாரும் உஷார் ஆனார்கள். கையும், களவுமாக இந்தக் கும்பலை பிடிக்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, டாக்டர் 9 லட்சம் ரூபாயை கொடுப்பதற்காக கன்னிங்காம் ரோட்டுக்கு சென்றார். பணத்தை அவர் நடிகை நயனாவின் கூட்டாளிகளான மல்லேஷ், சுனில் குமார், ஹேமந்த் குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கே மறைந்திருந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, நடிகை நயனாவை வலை வீசி தேடி வந்தனர்.

கைது

டாக்டரின் புகார் குறித்து அறிந்ததும் அவரைப் போன்று நடிகையின் செக்ஸ் வலையில் வீழ்ந்து அவதிப்பட்டவர்கள் போலீசாரை நாடினர்.

இந்த நிலையில் தான் தேடப்பட்டு வருவதை அறிந்து நடிகை நயனா பெங்களூர் ஷோலே சர்க்கிளில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவரை பெங்களூர் 9-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், நடிகை நயனாவை ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முடிவில், நடிகை நயனா கும்பலிடம் யார், யார் சிக்கினார்கள், யார் யாரிடம் மிரட்டி பணம் பறித்தார்கள் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment