10 வயதில் நாடகத்தில்
சேர்ந்த எஸ்.எஸ். ராஜேந்திரன்: சிவாஜி கணேசனுடன் சினிமாவில் அறிமுகம்
சிறு வயதிலேயே
நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1952 தீபாவளிக்கு வெளிவந்த
"பராசக்தி'' மூலம் சிவாஜி கணேசனுடன் திரை உலகில் அறிமுகமானார். "இலட்சிய
நடிகர்'' என்று புகழ் பெற்றார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின்
சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள சேடப்பட்டி கிராமம். இவருடைய தந்தை
சூரியநாராயண தேவர். கல்வி அதிகாரியாக பதவி வகித்தவர். தாயார் ஆதிலட்சுமி. எஸ்.எஸ்.ஆருக்கு
ஒரு சகோதரி உண்டு. அவர் பெயர் பாப்பம்மாள்.
எஸ்.எஸ்.ஆர்.
1928-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார்.
சிறு வயதிலேயே
5-வது வகுப்பை முடித்த எஸ்.எஸ்.ராஜேந் திரன் 6-வது வகுப்பில் சேர்வதற்கு மேலும் ஒரு
வயது தேவை என்பதால், ஒரு ஆண்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடகம்
அப்போது தந்தையின்
நண்பரின் வேண்டுகோளால் புளியமா நகரில் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்துச்
செல்லப்பட்டார். `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப்படிப்பை
தொடர்ந்தார்.
எப்படியாவது தனது
மகனை தன்னைப்போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்று எஸ்.எஸ்.ஆரின் தந்தை லட்சியமாகவே
வைத்து இருந்தார்.
1937-ல் எம்.கே.தியாகராஜ
பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம், சக்கை போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம்
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "சிந்தாமணி'' கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது,
எஸ்.எஸ்.ஆர். கதாநாயக னாக நடித்தார். அவர் நன்றாக நடித்ததால், அவருக்கு அப்போது முதல்
பரிசு கிடைத்தது.
இந்த நாடகத்தை
நடத்திய ஆசிரியர், "நீ அழகாக இருக்கிறாய். நடிப்பும் நன்றாக வருகிறது. எனவே, சினிமா
உலகிற்கு நீ சென் றால் புகழ் பெறமுடியும்'' என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார். "நீ
இனி படிக்க வேண்டாம். நடிக்கப்போ'' என்று கூறி, நாடக கம்பெனியில் சேர தன் செலவில் மதுரைக்கு
அனுப்பி வைத்தார்.
மதுரைக்கு சென்ற
எஸ்.எஸ்.ஆர் டி.கே.எஸ். நாடக சபாவில் சேர்ந்தார். அங்கு "சிவலீலா'' நாடகத்தில்
காவலாளி வேடமே கிடைத்தது. அதன் பிறகு "மகாபாரதம்'' நாடகத்தில் சகாதேவ னாக நடிக்கத்
தொடங்கினார். இதில், திரவுபதியாக (பெண் வேடத்தில்) நடித்தவர் ஏ.பி.நாகராஜன்.
தன் மகன் நாடக
நடிகனாகி விட்டானே என்ற வெறுப்பில் இருந்த எஸ்.எஸ்.ஆரின் தந்தை, எஸ்.எஸ்.ஆரின் நடிப்பைப்
பார்த்து பாராட்டினார். இது எஸ்.எஸ்.ஆருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.
அண்ணாவுடன் அறிமுகம்
நாடகத்தில் நடித்துக்
கொண்டிருந்தபோதே தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும் பழகும் வாய்ப்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு
கிடைத்தது.
19-11-1943-ல்
ஈரோட்டில் `சந்திரோதயம்' நாடகத்தை நடத்த அண்ணா வந்தார்.
அப்போது அந்த நாடகத்தில்
அண்ணாவும் நடிக்க வேண்டி இருந்தது. எனவே ஏற்கனவே அங்கு நாடகம் நடத்தி வந்த குழுவில்
இருந்த எஸ்.எஸ்.ஆர். அண்ணாவுக்கு `மேக்கப்' போட்டார்.
தொடர்ந்து எஸ்.எஸ்.ஆர்.
நாடகத்தில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது.
எனவே, நாடக கம்பெனியில் இருந்து விலகி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.
அபிமன்யு வேடம்
நழுவியது
சென்னைக்கு வந்த
நாளில் "அபிமன்யு'' படத்தில் அபிமன்யுவாக நடிக்க எஸ்.எஸ்.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது.
"மேக்கப் டெஸ்ட்'' கூட முடிந்து விட்டது.
இந்த நிலையில்,
"எஸ்.எஸ்.ஆர். எங்கள் நாடகக் குழுவில் இன்னும் 7 மாதம் நடிக்க வேண்டும் என்று
ஒப்பந்தம் உள்ளது'' என்று, டி.கே.எஸ். நாடக குழுவினர் தெரிவித்தனர். இதனால், அபிமன்யு
படத்திலிருந்து எஸ்.எஸ்.ஆர். விலக நேரிட்டது.
இதைத்தொடர்ந்து,
"அபிமன்யு'' படத்தில் எஸ்.எம்.குமரேசன் நடித்தார். அர்ச்சுனனாக எம்.ஜி.ஆர். நடித்தார்.
பாடகர்
அதன் பிறகு சேலம்
மூர்த்தி பிக்சர்சின் "ஆண்டாள்'' படத்தில் எஸ்.எஸ்.ஆர். பின்னணி பாடகரானார்.
"இன்ப உலகிலே
மன்மதன் பூங்கனை'' என்ற பாடலை பாடினார்.
நேஷனல் பிக்சர்ஸ்
பெருமாள் முதலி யார், ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து "பராசக்தி''படத்தை தயாரித்தார்.
கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தை எழுதிய இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுடன், எஸ்.எஸ்.
ராஜேந்திரன் புதுமுகமாக அறிமுக மானார். சிவாஜிகணேசனின் அண்ண னாக "ஞானசேகரன்''
என்ற வேடத் தில் எஸ்.எஸ்.ஆர். சிறப்பாக வசனம் பேசி நடித்தார்.
குறிப்பாக, சிவாஜிகணேசனைப்
போல் தெளிவாகவும், உணர்ச்சியுட னும் வசனம் பேசும் ஆற்றல் ராஜேந் திரனுக்கு இருந்தது.
1952-ம் ஆண்டு
தீபாவளித் திரு நாளில் வெளிவந்த "பராசக்தி'', தமிழ்ப் பட உலகில் மறுமலர்ச்சி ஏற்படச்
செய்ததுடன், அதில் இடம் பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
எஸ்.எஸ். ராஜேந்திரன்
நடித்த முதலாளி மகத்தான வெற்றி: ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தம்
எம்.ஏ.வி. பிக்சர்சார்
குறைந்த செலவில் தயாரித்த "முதலாளி'' படம், மாபெரும் வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜேந்திரன்
வாழ்க் கையில் திருப்புமுனை ஏற் படுத்தியது.
மனோகரா
"பராசக்தி''யில்
அறிமுக மான சிவாஜிகணேசனும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து
நடித்தனர். அவற்றில் முக்கியமானது "மனோகரா.'' "பராசக்தி''க்குப்
பிறகு சிவாஜிகணேசன் - கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மகத் தான வெற்றிப்படம் "மனோ கரா.''
அதில் சிவாஜியின் உயிர்த்தோழனாக ராஜேந்திரன் உணர்ச்சிகரமாக நடித்தார்.
அறிஞர் அண்ணா கதை-
வசனம் எழுதிய "சொர்க்க வாசல்'' படத்தில் "நடிப்பிசைப் புலவர்''கே.ஆர்.ராமசாமி
யுடன் எஸ்.எஸ்.ஆர். சேர்ந்து நடித்தார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமியின் ஜோடி பத்மினி.
ராஜேந்திரனின் காதலி அஞ்சலிதேவி. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இதே நேரத்தில்
பீம்சிங் டைரக்ஷனிலும், கருணாநிதி கதை- வசனத்திலும் உருவான அம்மையப்பனில் கதாநாயகனாக
எஸ்.எஸ்.ஆர்.நடித்தார். அவருக்கு ஜோடி ஜி.சகுந்தலா. படம் சுமாராகத்தான் ஓடியது.
"ரத்தக்கண்ணீர்''
படத்தில் எம்.ஆர்.ராதாவின் நண்பனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அந்த படம் வெற்றிப்படமாக
அமைந்தது.
குலதெய்வம்
முரசொலி மாறன்
திரைக்கதை - வசனத்தில் ஏவி.எம். தயாரித்த "குல தெய்வம்'' (1956) படத் தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.
"ரங்கோன்ராதா''
(1956) படத்தில் மீண்டும் சிவாஜியுடன் எஸ்.எஸ். ஆர்.இணைந்து நடித் தார். இந்தப்படமும்
வெற்றிகரமாக அமைந்தது.
முதலாளி
1957 தீபாவளி அன்று
வெளியான எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரிப்பான "முதலாளி'', வரலாறு படைத்தது. இதில் எஸ்.
எஸ்.ராஜேந்திரனும், தேவிகாவும் ஜோடியாக நடித்தனர். அதுவரை பல படங்
களுக்கு துணை டைரக்ட ராக இருந்த "முக்தா'' சீனிவாசன், இப்படத்தின் மூலம் டைரக்டரானார்.
குறைந்த `பட்ஜெட்'டில்
தயாரிக்கப்பட்ட "முத லாளி'', தீபாவளிக்கு வெளிவந்த பெரிய பேனர் படங்களை யெல்லாம்
ஓரம் கட்டிவிட்டு, முதல் இடத்தைப் பெற்றது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் நட்சத்திர அந்தஸ்து
பெற்றார்.
இப்படத்தில், தேவிகா
ஏரிக்கரையில் நடந்து செல்ல, "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே'' என்று பாடியபடி
(குரல்: டி.எம்.எஸ்) எஸ்.எஸ்.ராஜேந்திரன் பின் தொடர்வார். இந்த பாடலும் காட்சி அமைப்பும்
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தை பிறந்தால் வழி
பிறக்கும்
இதற்கு 2 மாதங்கள்
கழித்து, பொங்கலுக்கு வெளிவந்த "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படம், ராஜேந்திரனுக்கு
மற்றொரு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
தமிழ்ப் புலவராக
இருந்த ஏ.கே.வேலன் இந்தப் படத்தின் மூலம் பட அதிபராகவும்,டைரக்டராகவும் ஆனார். குறுகிய
காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், எல்லோரும் வியக்கும் வகையில் பெரிய வெற்றிப் படமாக
அமைந்தது. வசூல் மழையில் நனைந்த ஏ.கே. வேலன், இதன் மூலம் கிடைத்த லாபத் தில் தன் தந்தை
பெயரால் "அரு ணாசலம் ஸ்டூடி யோ''வை அமைத்தார்.
இந்தப் படத்தில்,
மலை யாளப்பட உலகின் "சூப் பர் ஸ்டார்'' பிரேம் நசீர், எஸ்.எஸ்.ஆருக்கு அடுத்த
வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மற்றும் ராஜசுலோ
சனா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி முத லியோர் நடித்த இப்படத் தில், "தை பிறந்தால்
வழி பிறக்கும் தங்கமே தங்கம்'', "அமுதும் தேனும் எதற்கு'', "எளியோரை தாழ்த்தி'',
"மண்ணுக்கு மரம் பாரமாப'' "ஆசையே அலைபோல'' முதலான அனைத்து பாடல்களும் ஹிட்
ஆயின. மருதகாசி, கண்ணதாசன், சுரதா, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி ஆகியோர் எழுதிய
பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன்.
"முதலாளி'',
"தை பிறந் தால் வழி பிறக்கும்'' ஆகிய படங்களின் வெற் றியைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கு
ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின.
நாடக மன்றம்
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதிலும், தொடர்ந்து நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக
"எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றம்'' தொடங்கினார். அண்ணாவின் "ஓர் இரவு'',
"சந்திரமோகன்'', மு.கருணாநிதி எழுதிய "அம்மையப்பன்'' ஆகிய நாடகங்களை நடத்தி
னார்.
எஸ்.எஸ்.ஆர். தனது
நாடக மன்றத்தின் மூலம் எம்.என். ராஜம், வைரம் நாடக சபாவில் நடித்து வந்த முத்துராமன்,
காரைக்குடியில் நாடகத்தில் நடித்து வந்த மனோரமா ஆகியோரை அழைத்து வந்து தனது நாடகங்களில்
நடிக்க வைத்தார். பின்னர் இவர்கள் திரைப்படத் துறையில் வெற்றி பெற்றார்கள்.
ஒரு முறை கோவையில்
நாடகம் நடத்த எஸ்.எஸ்.ஆர். சென்றபோது "ஆட்டோ கிராப்''வாங்க வந்த ஒரு இளம் பெண்ணை,
தனது நாடகத்தில் நடிகையாக்கினார். இவர்தான், பின்னாளில் கேரள திரை யுலகின் மிகப்பெரிய
நடிகை யாக திகழ்ந்த ஷீலா. புராணப் படங்களில்
நடிக்க மறுத்த எஸ்.எஸ்.ஆர்: லட்சிய நடிகர் என்று பெயர் பெற்றார்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
புராணப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் "லட்சிய நடிகர்'' என்று பட்டம்
பெற்றார்.
"முதலாளி'',
"தை பிறந் தால் வழி பிறக்கும்'' படங்களைத் தொடர்ந்து, "பிள்ளைக்கனியமுது'',
"பெற்ற மகனை விற்ற அன்னை'', "திருடர்கள் ஜாக்கிரதை'', "தேடிவந்த செல்வம்'',
"அன்பு எங்கே'', "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'', "மாமியார் மெச்சிய
மருமகள்'', "கல்யாணிக்கு கல்யாணம்'' என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
புலியுடன் சண்டை
நடிகர் பி.எஸ்.வீரப்பா
தயாரித்த "பிள்ளைக் கனியமுது'' படத்தில் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சியில்
எஸ்.எஸ்.ஆர். `டூப்' போடாமல் நடித்தார். சிறுத்தையின் கால் நகம் வெட்டப்பட்டு, வாய்
தைக்கப்பட்டு, அதன் பின்னர் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது
சிறுத்தை காலால் உதைத்ததில், எஸ்.எஸ்.ஆர். முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம்
வடிந்து கொண்டே இருந்தது.
ஆனால் சூட்டிங்
நடந்து கொண்டே இருந்தது. படத்தின் இயக்குனரிடம் "நான் நடிக்கும்போது பயப்படுவதுபோல
நடிப்பேன். அதைப் பார்த்து சூட்டிங்கை நிறுத்திவிடா தீர்கள்'' என்று எஸ்.எஸ்.ஆர். கூறி
இருந்ததே இதற்கு காரணம். இந்தக்காட்சி சிறப்பாக அமைந்தது.
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்
இயக்குனர் ப.நீலகண்ட
னின் சொந்த படமான தேடிவந்த செல்வத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு எழுத
வந்த போது எஸ்.எஸ்.ஆர். அருகே சென்று அமர்ந்தார்.
"தம்பி! நீங்க
பாட்டு எழுத ணும், அதை பார்த்து நான் ரசிக்க வேண்டும்!'' என்று எஸ்.எஸ்.ஆர். கூறினார்.
உடனே, "நீ
பக்கத்திலே இருப்பே. நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்'' என்ற பாடலை பட்டுக்கோட்டை
எழுதி முடித்தார்.
சிவகங்கை சீமை
கவிஞர் கண்ணதாசனின்
திரைக்கதை, வசனம் தயாரிப்பில் மருதுபாண்டியர் வரலாறு
"சிவகங்கை
சீமை'' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் `முத்தழகு' என்ற தளபதி வேடத்தில்
எஸ்.எஸ்.ஆர். சிறப்பாக நடித்தார்.
"இறுதியான
இந்த தன்மானப் போரில் நான் இறப்பது நிச்சயம். ஆகவே நம்குல வழக்கப்படி உயிரோடு வாய்க்கரிசி
போட்டு என்னை வழியனுப்பி வை'' என்று தனது மனைவியாக நடித்த குமாரி கமலாவிடம் எஸ்.எஸ்.ஆர்.
பேசியது அனைவரது மனதையும் உருக்கும் வகையில் அமைந்தது.
சொந்தப்படம்
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
பல படங்களில் நடித்துக்கொண் டிருந்தபோது சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்தார்.
அதற்காக "எஸ்.எஸ்.ஆர். பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.
அந்த படக்கம்பெனி
மூலம் "தங்கரத்தினம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.ஆர். எடுத்தார். அந்தப் படத்தில் கதாநாயகனாக
நடித்ததுடன் அவரே டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில்தான்,
முதன் முதலில் தி.மு.கழகக் கொடி காண்பிக்கப்பட்டது. விஜயகுமாரி, எம்.என்.
ராஜம், பிரேம் நசீர் ஆகியோ ரும் இதில் நடித்தனர். சாதி ஒழிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட
இந்தப் படத் தில் எஸ்.எஸ்.ஆர். எழுதிய "துன்பம் தீராதோ, துயரம் மாறாதோ'' என்ற
பாடல் இடம் பெற்றது. படமும் வெற்றிப்படமானது.
"தலை கொடுத்தான்
தம்பி'', "புதுமைப்பெண்'', "பிரசி டெண்ட் பஞ்சாட்சரம்'', "நாட்டுக்கொரு
நல்லவன்'', "அல்லி பெற்ற பிள்ளை'', "ஓடிவிளையாடு பாப்பா'', "சங்கிலித்தேவன்''
ஆகிய படங்களில் எஸ்.எஸ்.ஆர். தொடர்ந்து நடித்தார்.
சிவாஜி - எம்.ஜி.ஆருடன்
நடித்த படங்கள்
சிவாஜி கணேசனுடன்
"பராசக்தி'', "பணம்'', "மனோ கரா'', "ரங்கோன் ராதா'', "தெய்வப்பிறவி'',
"ஆலய மணி'', "பச்சைவிளக்கு'', "கைகொடுத்த தெய்வம்'', "பழனி'',
"சாந்தி'', "எதிரொலி'' ஆகிய படங்களில் எஸ்.எஸ்.ஆர். நடித்தார்.
"தெய்வப்பிறவி''யில்
சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர். மூவரும் போட்டி போட்டு நடித்தனர். இறுதிக்கட்டங்கள்
உணர்ச்சிமயமாக இருந்தன.
"கை கொடுத்த
தெய்வம்'' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கிய அற்புத படைப்பு. சிவாஜிகணேசன், சாவித்திரி,
கே.ஆர்.விஜயா ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர். அருமையாக நடித்தார்.
சாவித்திரியின்
உன்னத நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. சாவித்திரியின் அண்ணனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார்.
அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா.
அதன் பிறகு
"காஞ்சித் தலைவன்'', "ராஜா தேசிங்கு'' ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர்.
இணைந்து நடித்தார். இவற்றில் எம்.ஜி.ஆரின் நண்பன் வேடம் எஸ்.எஸ்.ஆருக்கு.
புராணப்படங்களில்
நடிக்க மறுப்பு
"லட்சிய நடிகர்''
என்ற பட்டம், வந்தது பற்றி எஸ்.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது:-
"நான் 8 வயதில்
இருந்தே கோவிலுக்கு செல்வது இல்லை. பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு இருந்ததால், புராணப்படங்களில்
நடிக்கவில்லை. புராண நாடகத்தில் மட்டும் நடித்து இருக்கிறேன்.
"முதலாளி'',
"தை பிறந்தால் வழி பிறக்கும்'' ஆகிய படங்களைத் தொடர்ந்து, எனக்கு நிறைய படங்கள்
வந்தன. புராணப் படங்களில் நடிப்பதற்குக்கூட பலர் அழைத்தார்கள். சம்பூர்ண ராமாயணம் படத்தில்,
பரதனாக நடிக்க முதலில் என்னைத்தான் அழைத்தார்கள்.
பெரியாரின் பகுத்தறிவு
கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட காரணங்களினால்,புராணப் படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.
என் கொள்கைக்கு முரணான எந்தப் படத்திலும் நான் நடித்தது இல்லை. இதனால்தான் "லட்சிய
நடிகர்'' என்று எனக்கு பெயர் வந்தது.
பெரியாரும், அண்ணாவும்
மேடைகளில் பேசும்போது என்னை "லட்சிய நடிகர்'' என்றுதான் குறிப்பிடுவார்கள்.''
இவ்வாறு எஸ்.எஸ்.ஆர். கூறினார்.
தேர்தலில் போட்டியிட்டு
எம்.எல்.ஏ. ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
தமிழ்நாட்டில்,
தேர்தலில் போட்டியிட்டு, சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் என்ற
பெரு மைக்கு உரியவர் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
தி.மு.க. மீது
பற்று கொண்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், படங்களில் நடித்த படியே, கட்சிக்காக நாடகங்கள் நடத்தி,
நிதி திரட்டிக் கொடுத்தார். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார்.
1957-ம் ஆண்டு
சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்
டார். தி.மு.கழகம், தேர்தலில் போட்டியிட்டது அதுவே முதல் தடவை. எஸ்.எஸ். ஆருக்கும்,
சேலம் தொகுதி யில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனுக்கும்
உதய சூரியன் சின்னம் கிடைக்காததால், சேவல் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில்,
காஞ்சீ புரம் தொகுதியில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா, குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட
கலைஞர் கருணாநிதி உள்பட 15 பேர் வெற்றி பெற்றனர். நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ஆர். இருவரும்
குறைந்த ஓட்டு வித்தியாசத் தில் தோல்வி அடைந்தனர்.
வெற்றி
1962-ல் சட்டமன்ற
தேர்தலில் மீண்டும் தேனியில் எஸ்.எஸ்.ஆர். போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்.
பிரசாரம் செய்தார்.
எஸ்.எஸ்.ஆர். பிரசாரம்
செய்தபோது, அவர் மீது திராவகம் வீசப்பட்டது. அப்போது அவர் ஒதுங்கிக் கொண்டதால் மயிரிழையில்
தப்பினார்.
இந்த தேர்தலில்
எஸ்.எஸ்.ஆர். வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
தேர்தலில் எஸ்.எஸ்.ஆர்.
வெற்றி பெற்றது குறித்து சிவாஜிகணேசன் கூறும் போது, "தேர்தலில் போட்டி யிட்டு
சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர் எனது நண்பர் எஸ்.ஆர்.ஆர் தான்'' என்றார்.
"சாரதா''
என்ற படத்தின் டைட்டிலில் எஸ்.எஸ். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. என்று பெயருடன் வெளியானது.
"எம்.பி''
ஆனார்
தி.மு.க. ஆட்சி
காலத்தில் டெல்லி மேல்-சபைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்டு "எம்.பி'' ஆனார்.
பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்து, 1981-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். பிறகு சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவராக பதவி வகித்தார். தற்பொழுது
அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
அரசியல் அனுபவங்கள்
பற்றி எஸ்.எஸ்.ஆர் கூறியதாவது:-
"நான் ராஜ்யசபா
எம்.பி ஆனவுடன், எனக்கு மாலை அணிவிக்க சிவாஜி என் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்
"என் மனசாட்சிக்கு விரோதமாகத்தான் உங்க ளுக்கு மாலை போட்டேன்'' என்றார்.
"என்ன காரணம்ப'' என்று நான் கேட்டேன். "வயதானதற்கு பிறகுதான் "எம்.பி''யாக
போகவேண்டும். தற்பொழுது சினிமாவில் நன்றாக இருக்கிறீர்கள். எம்.பி. ஆனதால் நடிப்பு
தொழில் பாதிக்கும். நானும், நீங்களும் சேர்ந்து நடித்த படங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
அதனால் சினிமாவில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும். நீங்கள் எம்.பி யானது சினிமாத்துறைக்கு
நஷ்டம். குறிப்பாக எனக்கு நஷ்டம்'' என்று சிவாஜி கணேசன் என்னிடம் கூறினார்.
நானும், சிவாஜியும்
சேர்ந்து நடித்த படங்களில், எனது பாத்திரம் குறைவாக இருந்தால், அதை அதிகப்படுத்தச்
சொல்வார், சிவாஜி.'' இவ்வாறு எஸ்.எஸ்.ஆர். கூறினார். நடிகர் சங்க தலைவராக
எஸ். எஸ்.ஆர். ஒரு முறை பதவி வகித்துள்ளார்.
கலப்புத் திருமணம்
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
1946-ம் ஆண்டு
டிசம்பர் மாதம் 1-ந்தேதி, தனது நாடகத்தில் உடன் நடித்த கேரளாவைச் சேர்ந்த பங்கஜத்தை
திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. அதே நாளில் எஸ்.எஸ்.ஆரின்
தங்கை பாப்பம் மாளுக்கும், "நடிகமணி'' டி.வி. நாராயணசாமிக்கும் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணங்கள்
அண்ணா தலைமையில், பாரதிதாசன் முன்னிலையில் நடந்தது. எஸ்.எஸ்.ஆர் -
பங்கஜம் தம்பதி களுக்கு இளங்கோவன், ராஜேந்திரகுமார், கலைவாணன், செல்வராஜ் என்ற 4 மகன்களும்,
பாக்யலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
அண்ணாவின் பாராட்டை
பெற்ற "காக்கும் கரங்கள்'' "காக்கும் கரங்கள்'' என்ற படத்தில் டாக்டர் வேடத்தில்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிறப்பாக நடித்தார். படத்தைப் பார்த்த பேரறிஞர் அண்ணா, ராஜேந்திர
னின் வீட்டுக்குச் சென்று பாராட்டினார்.
1965-ல்
"ஏவி.எம்'' தயாரித்த படம் "காக்கும் கரங்கள்.'' இதில் எஸ்.எஸ். ராஜேந்திரன்,
சிவகுமார், விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுத,ஏ.சி.திருலோகசந்தர்
டைரக்ட் செய்தார்.
அண்ணா பாராட்டு
இந்தப் படத்தில்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் டாக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்தார். படத்தைப் பார்த்த
அண்ணா, தியேட்டரில் இருந்து நேராக எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்று அவர் நடிப்பைப்
பாராட்டி னார். "இதுவரை நீ நடித்துள்ள படங்களில் இதுவே சிறந்தது'' என்று கூறினார்.
பூம்புகார்
மேகலா பிக்சர்ஸ்
தயாரித்த படம் "பூம்புகார்.'' சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து, கலைஞர் மு.கருணாநிதி
திரைக்கதை - வசனம் எழுதிய படம்.
1942-ல் பி.ï.சின்னப்பா
கோவலனாகவும், கண்ணாம்பா கண்ணகியாகவும் நடிக்க ஜுபிடர் தயாரித்த "கண்ணகி'', மிகப்பெரிய
வெற்றிப்படம். அதில் இளங்கோவன் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டன. சின்னப்பாவும்,
கண்ணாம்பாவும் அற்புதமாக நடித்திருந்தனர்.
அப்படியிருக்க,
கண்ணகி கதையை மீண்டும் படமாக எடுத்தால் ஓடுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர். அதற்குக்
காரணம் உண்டு. அம்பிகாபதி, திருநீலகண்டர், ஆர்யமாலா (காத்தவராயன்), ஹரிச்சந்திரா முதலான
படங்கள் இரண்டாவது முறையாக தயாரிக்கப்பட்டு, சரியாக ஓடவில்லை. அதனால் `பூம்புகார்'
வெற்றி யில் பலருக்கும் சந்தேகம் இருந்தது.
பூம்புகாரில் கோவலனாக
எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கண்ணகியாக விஜயகுமாரியும், மாதவியாக ராஜஸ்ரீயும், சமணத்துறவியாக
கே.பி.சுந் தரம்பாளும் நடித்தனர்.
"பூம்புகார்''
படம் வெளியாகி, சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. பழைய "கண்ணகி''யைப் பார்த்தவர்கள்கூட
"பூம்புகார்'' படம் சிறப்பாக அமைந்திருப்பதாகப் பாராட் டினர். "மனசாட்சி
உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது'' என்பது போன்ற வசனங்கள்,
ரசிகர்களைக் கவர்ந்தன.
இரட்டை வேடம்
எஸ்.எஸ்.ஆர். பிக்சர்ஸ்
எடுத்த "அல்லி'' என்ற படத் தில், எஸ்.எஸ்.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். ரவுடியாக
இருக்கும் எஸ்.எஸ்.ஆரை, அவரது அக்காள் சவுகார் ஜானகி கொலை செய்து விடுவார். இந்த நிலையில்
எதிரிகளால் கண்களை இழந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான மற்றொரு எஸ்.எஸ். ஆருக்கு சவுகார்
ஜானகி தனது கண்களை கொடுப்பார். அதன் பிறகுதான், சவுகார் ஜானகி அவரது தம்பியை கொலை செய்திருப்பது
போலீஸ் அதிகாரியான எஸ்.எஸ்.ஆருக்கு தெரியவரும். இறுதியில், பல்வேறு
மனப்போராட்டத்திற்கு பிறகு தனக்கு கண் கொடுத்த சவுகார் ஜானகியை, போலீஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஆர்.
கைது செய்வது தான் கதை. மிகவும் உணர்ச்கரமான படம்.
தனது மகன் மருதுபாண்டியன்
பெயரில் படக்கம் பெனியை ஆரம்பித்த எஸ். எஸ்.ஆர். "இரட்டை மனிதன்'' என்ற படத்தை
எடுத்தார். படத்திற்கான கதை, வசனத்தையும் அவரே எழுதினார். கே.சங்கர் இயக்கினார்.
இதில், ஒரே நபர்
இரு வேடங்கள் புனைந்து, ஒரு குடும்பத்தை ஏமாற்றுவதுதான் கதை.
மற்றும் பெற்ற
மனம், மணப்பந்தல், மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, குமுதம், சாரதா, செந்தாமரை, ஆலய
மணி, வானம்பாடி, நானும் ஒரு பெண், காஞ்சித் தலைவன், சாந்தி, பூமாலை, அவன் பித்தனா,
தாயே உனக்காக, அன்பின் முகவரி உள்பட 75 படங்களில் நடித்துள்ளார், எஸ்.எஸ்.ஆர்.
இளைய தலைமுறை நடிகர்களுடன்
எஸ்.எஸ்.ஆர்.
தமிழ்த்திரை உலகில்
நீண்ட காலம் கதாநாயகனாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்,பிற்காலத்தில் இளம் தலைமுறை நடிகர்களுடன்
இணைந்து நடித்தார்.
புகழ் பெற்ற ஜோடி
1952-ல் பட உலகில்
அடியெடுத்து வைத்த எஸ்.எஸ்.ஆர்., அனேகமாக அனைத்து முன்னணி நடிகைகளுடனும் ஜோடி சேர்ந்து
நடித்துள்ளார்.
அதிக படங்களில்
இணைந்து நடித்தவர் விஜயகுமாரி. வடநாட்டில் ராஜ்கபூர் - நர்கீஸ் ஜோடி புகழ் பெற்று
விளங்கியது போல், தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி ஜோடி புகழ் பெற்று
விளங்கியது.
யாரும் எதிர்பாராதவிதமாக
ராஜ்கபூர் - நர்கீஸ் ஜோடி பிரிந்தது போல, இந்த ஜோடி யும் பிரிந்தது.
எஸ்.எஸ்.ஆர் -
விஜயகுமாரி நடித்த படங்களில் முக்கியமானது "பூம்புகார்.'' அதில் கோவலனாக எஸ்.எஸ்.ஆரும்,
கண்ணகியாக விஜயகுமாரியும் நடித்தனர். சிலப்பதிகார கோவலன் - கண்ணகிக்கு குழந்தை கிடையாது.
திரை உலக கோவலன் - கண்ணகிக்கு ஒரு மகன் உண்டு. பெயர் ரவிக்குமார்.
மறக்க முடியுமா?
மேகலா பிக்சர்ஸ்
தயாரிப்பான "மறக்க முடியுமா'', கலைஞர் கருணாநிதி வசனத்திலும்,முரசொலிமாறன் டைரக்ஷனிலும்
உருவான படம். இதில் கதாநாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார்.
இந்தப்படம் உணர்ச்சிமய
மானது. தன் மூத்த சகோதரி என்று தெரியாமல், தேவி காவை கெடுக்க முயற்சிப்பார், எஸ். எஸ்.ஆர்.
அவரிடமிருந்து தப்ப, தன் கழுத்தை அரிவாள் மனையினால் அறுத்துக் கொள்வார், தேவிகா. இக்கட்டத்தில்
இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.
பத்மினியிடம் வாங்கிய
அடி
காட்சி இயற்கையாக
அமைய, டைரக்டருக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுப்பவர், எஸ்.எஸ்.ஆர். அதனால் எதிர்பாராத
ஆபத்துகளில் சிக்கியதும் உண்டு.
"தெய்வப்பிறவி''
படத்தில் பத்மினி மீது சந்தேகப்படுவார், அவர் கணவனாக நடிக்கும் சிவாஜி. அதை கண்டித்து
சிவாஜியிடம் கோபமாகப் பேசுவார், எஸ்.எஸ்.ஆர்.
"அவரை நீ
எப்படி திட்டலாம்'' என்று கோபப்பட்டு, எஸ்.எஸ்.ஆரை குடையால் அடிப்பார், பத்மினி. நடிக்கும்போது
உணர்ச்சிவசப்பட்டுவிட்ட பத்மினி, குடையால் உண்மையாகவே விளாசிவிட்டார்! ராஜேந்திரனுக்கு
உடம்பு முழுவதும் ரத்த காயம். காய்ச்சல் வேறு வந்து விட்டது. சில நாட்கள் படுக்கையில்
இருந்து சிகிச்சை பெற்றார்.
இளம் தலைமுறை
சென்ற தலைமுறை
நடிகரான எஸ்.எஸ்.ஆர். தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
விஜயகாந்துடன்
"தர்மா'' படத்திலும், சரத்குமாருடன் "மூவேந்தர்'' படத்திலும், சூரியாவுடன்
"ஸ்ரீ'' படத்திலும், நெப்போலியனுடன் "ராஜாளி'' யிலும், சிலம்பரசனுடன்
"தம்'' படத்திலும் எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார்.
தாமரைச்செல்வி
முதல் மனைவி பாப்பம்மாள்
மறைவுக்குப் பிறகு 1974-ம் ஆண்டு தாமரைச் செல்வியை எஸ்.எஸ்.ஆர். திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு லட்சுமி
என்ற மகளும், மருதுபாண்டியன் என்கிற கண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
கண்ணன், டெலிவிஷன்
தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றவர். "குங்குமம்'' தொடரில்`நமச்சு'வாகவும்,
"அண்ணி'' தொடரில் `முரளி'யாகவும் ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் "கரகாட்டக்காரி''
படத்தில் கதாநாயகனாக நடித்தார். "அது'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
விருதுகள்
தமிழக அரசின் பாகவதர்
விருது, கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எஸ்.எஸ்.ஆர்.
பெற்று இருக்கிறார்.
எஸ்.எஸ்.ஆரின்
மகன் ராஜேந்திரகுமார், 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு பாராளுமன்ற
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று "எம்.பி''யானார்.
No comments:
Post a Comment