இந்தி நடிகர் ஷாகித் கபூர் எப்16 போர் விமானத்தில் பறக்க இருக்கிறார். போர் விமானங்கள் பற்றி எல்லா தரப்பு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச போர் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் நடக்க உள்ள இக்கண்காட்சி பெங்களூரில் நாளை தொடங்குகிறது. 13&ம் தேதி வரை நடக்க உள்ளது. பல நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இதில் உலகம் முழுவதும் இருந்து போர் விமானங்கள் இடம்பெறுகின்றன.
இதையொட்டி வித்தியாச சாதனை படைத்து அசத்த இருக்கிறார் இந்தி நடிகர் ஷாகித் கபூர் (29). உலகில் மிக வேகமாக செல்லும் விமானங்களில் ஒன்றான எப்16 ரக போர்விமானத்தில் இவர் பறக்க இருக்கிறார். இந்த விமானத்தில் பறக்கும் 2 வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா எப்16 ரக விமானத்தில் 20 நிமிடங்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.
மிக வேகமாக பறக்கும் விமானம் என்பதால் கடந்த ஒரு மாதமாக ஷாகித்துக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பல கட்டமாக மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்த ஷாகித் வரும் 11ம் தேதி பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எப்16 போர் விமானத்தில் செல்ல உள்ளார். விமானியுடன் துணை விமானி இருக்கையில் அமர்ந்து ஷாகித் பயணம் செய்வார். ஜூலையில் வெளிவர உள்ள ‘மவ்ஸம்’ என்ற படத்தில் போர் விமான பைலட்டாக ஷாகித் நடித்திருக்கிறார். இது அவரது தந்தை பங்கஜ் கபூர் இயக்கிய படம். இந்த ரோலுக்காக போர் விமானிகளை சந்தித்து அவர்களிடம் ஷாகித் ஆலோசனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment