இந்திய கிரிக்கெட் வாரியம் பணப் பிரச்சனையை கையில் எடுத்ததையடுத்து, இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்களை வரும் 5ஆம் தேதிக்குள் தாயகம் திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர்,
பிசிசிஐ அனுப்பியுள்ள மின்னஞ்சல்கள் அடிப்படையில், இலங்கை வீரர்கள் தாயகம் திரும்பும் காலக்கெடு நீட்டிப்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இலங்கை வீரர்கள் மே 10ஆம் தேதி இங்கிலாந்து செல்வதையும் ஒத்திவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிசிசிஐக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுடனான நல்லுறவை தொடர விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் மே 18 ந்தேதி வரை விளையாட அவகாசத்தை நீட்டித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் தற்போது குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் நாடு திரும்பிவிட்டால் சம்மந்தப்பட்ட ஐபிஎல் அணிகளுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளானது.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ அனுப்பிய கடிதத்தில், இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு நிபந்தனை விதித்திருந்தது. ஐபிஎல் போட்டியில் இருந்து இலங்கை வீரர்கள் முன் கூட்டியே விலகினால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 கோடி பிடித்து வைக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்பிறகே இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment