முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் கலைஞர் டிவி தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளில் அவருக்கு தொடர்பு இருக்காது என்ற அனுமானத்தில் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டுள்ளதாம் சிபிஐ.
இதுகுறித்து தனது 2வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விரிவாகத் தெரிவித்துள்ளது.
கலைஞர் டிவியில் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளவர் தயாளு அம்மாள். கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளபோதிலும், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணத்தை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தெளிவாக்குகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாளை சாட்சிகளில் ஒருவராக சேர்த்துள்ளது சிபிஐ. அதாவது கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக இவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாளு அம்மாள் குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், கலைஞர் டிவி இயக்குநர்கள் குழுவிடம், தனக்கு வயதாகி விட்டதாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தனக்குத் தெரியாது என்பதாலும், கூட்டத்திற்கு வெறுமனே வந்து போவேன், வேறு எந்த பணியையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பாக உங்களது முழுத் திறமைகளையும், அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துமாறும் அவர் சரத்குமார் ரெட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரணையின்போது சிபிஐ கைப்பற்றிய ஒரு ஆவணத்தில், தனக்கு வயதாகி விட்டதையும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. இதுகுறித்து 2007ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நடந்த இயக்குநர் குழுக் கூட்ட மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன விவகாரம் தொடர்பாக தன்னால் எதையும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக எதையும் தான் கவனிக்க முடியாது என்றும் தயாளு அம்மாள் தெரிவித்துள்ளார். எனவே கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பான எதிலும் தயாளு அம்மாளுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வருகிறது - அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார் என்பதைத் தவிர.
தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதை கம்பெனி பதிவாளருக்கும் முறைப்படி கலைஞர் டிவி தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது சிபிஐ.
இதன் மூலம், தமிழ் மட்டுமே தெரிந்த காரணத்தால் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலிருந்து தயாளு அம்மாள் தப்பியுள்ளார் என்பது புலனாகிறது.
No comments:
Post a Comment