2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் விடுதலையாகிறார்.
2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.
இந்த மனு நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. மத்திய அமைச்சராக இருந்து அதிகாரம் பெற்றரவராக இருந்ததால் இவர் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது. இவருக்கு ஜாமின் வழங்க கூடாது. ராசாவை விடுதலை செய்தால் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார்.
இதற்கு பதிலளித்த ராசாவின் வழக்கறிஞர் குப்தா, ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டு விட்டது. எனவே ராசாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் கோர்ட்டின் எந்த நிபந்தனையும் அவர் ஏற்க தயாராக உள்ளார். ஆயள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒரு அமைசசராக இருந்திருப்பதால் இவர் நாட்டை விட்டு ஓடுவார் என சந்தேகிக்க முடியாது. சட்டப்பூர்வ விசாரணைக்கு தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
இந் நிலையில் இன்று தீர்ப்பை தெரிந்து கொள்ள சென்னை, திருச்சி, பெரம்பலூர், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சென்றிருந்த சுமார் 200 ராசாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். ராசாவும் நீதிமன்றம் வந்திருந்தார்.
நீதிபதி சைனி வந்ததும் முதலில் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும் ஆ.ராசாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ராசாவை இன்னும் சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தார்.
ராசாவின் ரூ.20 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி சைனி தனது 14 பக்க உத்தரவில் ராசாவுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார். அதன்படி, ராசா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் டெல்லியில் தான் தங்கியிருக்க வேண்டும். தமிழகம் செல்ல வேண்டுமானால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். தொலை தொடர்ப்பு அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என நிபந்தனைகள் விதித்தார்.
அதே நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார்.
நீதிமன்றத்தில் ராசா வாழ்க கோஷம்:
ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ராசாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
மனைவி மகிழ்ச்சி:
ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கூறுகையில், நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ராசாவுக்கு திமுக துணை நிற்கும்-டி.ஆர்.பாலு:
ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கருத்துத் தெரிவித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ராசாவுக்கு திமுக எப்போதும் துணைநிற்கும் என்றார்.
ஊட்டி-பெரம்பலூரில் பட்டாசு-இனிப்பு:
ராசாவுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பெரம்பலூரில் முன்னாள் கவுன்சிலர் மாரிக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பழைய பஸ் ஸடாண்ட் அருகே கூடி பட்டாசு வெடித்ததோடு மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அதே போல ராசா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஊட்டியிலும் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததையடுத்து கடந்த 2010ம் ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராசா. அதன் பிறகு அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசா இப்போது வெளியே வருகிறார்.
இந்த வழக்கில் கடைசியாக ஜாமீனில் வரும் நபர் ராசா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment