2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட 14 பேரில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசாவைத் தவிர மற்ற 13 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஜாமீனில் விடுதலை ஆனார்கள். இதைத் தொடர்ந்து ஆ.ராசாவும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு மீதான விசாரணை முடிந்ததும் ஆ.ராசாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தமிழகத்துக்கு நீதிமன்ற அனுமதி இன்றி செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். ஆ.ராசாவுக்கு நீதிபதி ரூ.30 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ஜாமீனில் விடுதலையானது குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூரில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தங்களுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு:
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த விவகாரம் செய்தியாளர்களான உங்களின் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன். ஆ. ராசாவுக்கு எதிரான 2ஜி ஊழல் வழக்கு வலுவிழந்துவிட்டது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment