திருச்சி அரசியல் பிரமுகர்களை பொறுத்த வரை 2011 ஜூன் மாதம் முதல் 2012 மார்ச் மாதம் வரை உள்ள 10 மாதங்கள் பீதியை ஏற்படுத்திய மாதங்களாக ஆகிவிட்டது. அந்தளவு கடந்த 10 மாதங்களில் 4 அரசியல் பிரமுகர்களின் மரணங்கள் ஏற்பட்டு விட்டன. முதல் அதிர்ச்சி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மரணம். திருச்சி மாவட்டத்திற்கு ஈடு கட்ட முடியாத அளவு இழப்பாக கருதப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் என முக்கிய பதவிகளை வகித்த மரியம்பிச்சை 2011 மே மாதம் நடந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஜூன் 16-ந்தேதி திருச்சி அருகே நடந்த கோர கார் விபத்தில் மரியம்பிச்சை மரணமடைய திருச்சி அரசியல் பிரமுகர்களுக்கு அதிர்ச்சி தொடங்கியது. அரசியல் ரீதியிலான பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
மரியம்பிச்சை கார் விபத்து திட்டமிட்ட சதி என புகார் எழுந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை கையில் எடுத்து 3 மாத முடிவில் வெளி மாநில லாரி டிரைவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் மரியம் பிச்சை மரணத்தின் சர்ச்சை விலகியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து அ.தி.மு.க.வினர் மீள்வதற்குள் பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளரும் 29-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கயல்விழியின் கணவருமான கேபிள் சேகர் அக்டோபர் மாதம் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சொத்துப் பிரச்சினைக்காக அவரது அண்ணன் மகன் சிலம்பரசன் 10 பேருடன் சேர்ந்து கேபிள் சேகரை தீர்த்துக்கட்டியதாக கூறினாலும், பலரது முன் விரோதமும் கேபிள் சேகரின் மரணத்துக்கு வினையாக வந்து சேர்ந்தது.
இந்த 2 துர் மரணங்களில் இருந்து திருச்சி அரசியல் பிரமுகர்கள் மீள்வதற்குள் தி.மு.க.வில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும் தி.மு.க.வில் துடிப்பாக செயல்பட்டவருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் மாதம் 27-ந்தேதி வாக்கிங் சென்ற போது கடத்திக்கொலை செய்யப்பட்டார்.
மரியம்பிச்சை மரணம் விபத்து என்றாலும் மரியம் பிச்சை, கேபிள்சேகர், ராமஜெயம் ஆகிய 3 பேரின் மரணமும் ஏற்பட்டது காலை 7.30 மணிமுதல் 9 மணிக்குள் என்பது குறிப்பிடத்தக்கது. ராம ஜெயத்தின் மரணத்துக்கான காரணமும், கொலைகாரர்கள் யார்? என்பதும் இது வரை தெரியாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 மாதங்களில் தொடர்ந்து நடந்த இந்த 3 பேர் மரணங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பல அரசியல் பிரமுகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உண்மை. இதனால் பல முக்கிய பிரமுகர்களின் நடவடிக்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
பலர் தங்கள் நடவடிக்கையை அமைதியாக்கிக் கொண்டுள்ளனர். பலர் திருஷ்டி பரிகாரம், பூஜை என தினமும் ஆன்மிக நடவடிக்கையை அதிகப்படுத்திக் கொண்டனர். இதுகுறித்து திருச்சி அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-
விபத்து, கொலை, இயற்கை மரணம் என 4 திருச்சி முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் கடந்த 10 மாதங்களில் இறந்து விட்டனர். ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் மணவை நடராஜனும் திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார். இப்படி திருச்சியில் அடுத்தடுத்து நடந்த அரசியல் பிரமுகர்களின் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.
இந்த நிலையில் திருச்சியின் பக்கத்து ஊரான புதுக்கோட்டை தொகுதி கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக்குமரனும் காலையில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்து உள்ளார். இதனால் பூஜை, ஆன்மிக வழிபாடு காரில் செல்லும் போது கூடுதல் கவனம் என நடவடிக்கைகளை பெரிதும் மாற்றிக்கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment