ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் 163 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, துவக்க வீரர்கள் சச்சின், ஸ்மித் ஜோடி அபார துவக்கத்தை அளித்தது. கடைசி வரை இந்த ஜோடி அபாரமாக ஆடி இருவரும் அரைசதம் கடந்து 18வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபார வெற்றியை பெற்று தந்தது.
ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் டிராவிட் 2வது ஓவரிலேயே 5 ரன்களை எடுத்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான ரஹானே 13 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு ஷேன் வாட்சன், பின்னி ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.
இந்த நிலையில் பின்னி 17 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அதன்பிறகு அதிரடியை தொடர்ந்த வாட்சன், 36 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 45 ரன்கள் எடுத்து போல்லார்டு பந்தில் வெளியேறினார். அதன்பிறகு வந்த அசோக் மெனாரியா 21 ரன்களில் குல்கர்னியின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் மலிங்கா ஒரு விக்கெட் வீழ்த்த, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் குல்கர்னி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
162 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, துவக்க வீரர்களான சச்சின், ஸ்மித் ஜோடி அபார துவக்கத்தை அளித்தது. அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை தொடர்ந்து அடித்து விளாசினர். ஸ்மித் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனா்ல் சச்சின் துவக்கம் முதலே பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தார்.
கடைசி வரை இருவரும் அவுட்டாகாமல் ஆடி அணிக்கு 18வது ஓவரில் வெற்றியை பெற்று தந்தனர். ஸ்மித் 58 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 87 ரன்களை எடுத்தார். சச்சின் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் நுழைந்துவிட்டு நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி வீரர்களுக்கு பயிற்சி ஆட்டம் போல இருந்தது.

No comments:
Post a Comment