ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதி மற்றும் ஒரு எம்.பி. தொகுதிக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் இதுவரை ரூ.15 கோடி சிக்கியது. இந்த நிலையில் ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி பன்வர்லால் ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் பணம் பெரிதும் நடமாடுவதாக பேசப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக தனி செல்போன் நம்பர் வெளியிடப்படுகிறது.
அந்த போனில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் பற்றி தகவல் சொல்லலாம். அல்லது எஸ்.எம்.எஸ். செய்யலாம். துப்பு கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பிடிபட்ட பணத்தில் 5 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசாக வழங்கப்படும். வருமான வரித்துறையில் இந்த திட்டம் அமுலில் உள்ளது. அதே நடைமுறை தேர்தல் துறையிலும் அமல்படுத்த உள்ளோம். பணத்தை ஒழித்து ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment