கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலும், அணுஉலை மின்நிலையத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 3 கடிதங்கள் வந்தது.
அந்த கடிதங்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் ஒரு கடிதத்தில் காண்டிராக்டர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த இடத்தில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்றும், 21-ந்தேதி அந்த வெடிகுண்டுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெடிக்க செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்ற 2 கடிதங்களில் அந்த காண்டிராக்டரிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு , 2 இடங்களில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மக்கள் பொது நலக்குழு அமைப்பு சார்பில் அந்த கடிதங்கள் எழுதப்பட்டிருந்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 கடிதங்களையும் கைப்பற்றி விசாரணைநடத்தி வருகின்றனர். இடிந்தகரை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிகள் எடுத்து செய்து வருகிறார். அவர் அணுமின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அவரை அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கில் மர்ம நபர்கள் இந்த கடிதங்களை அனுப்பியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அந்த கடிதங்களை அனுப்பிய நபர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதரி, டி.எஸ்.பி. ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் தனிப்படை போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment