டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு விருந்தின்போது, அமெரிக்க இளம்பெண் ஒருவரை, பெங்களூர் அணி வீரர் லூக் முத்தமிட முயற்சித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பான பிரச்சினையை இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் எழுப்பிப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இளம்பெண்ணை பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் லூக் மானபங்கப்படுத்த முயற்சித்துள்ளார். கிரிக்கெட்டை ஐ.பி.எல். போட்டி ஒரு பொழுதுபோக்காக மாற்றி விட்டது. இந்தப் போட்டியில் தொடர்ந்து ஒரு சர்ச்சை மாறி அடுத்த சர்ச்சை வந்தவண்ணம் இருக்கிறது.
டெல்லி ஓட்டல் சம்பவத்துக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டியில் 5 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. மற்றொரு சம்பவத்தில் நடிகர் ஒருவர் (ஷாருக்கான்) குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் கிரிக்கெட் போட்டியை நடனமாகவும், நாடகமாகவும் மாற்றி விட்டது. இதெல்லாம் இந்திய பிரிமியர் லீக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் சட்டத்துக்கு மேலானவர்கள் என்பதாக காட்டுகிறது. இது தொடர்பாக கடிதங்கள் எழுதினாலும், நடவடிக்கை இல்லை.
ஐ.பி.எல். போட்டியுடன் தொடர்புடைய தவறுகள் குறித்து ஏற்கனவே நான் பிரச்சினை எழுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது குரல் கேட்கப்படவில்லை. எனவே ஐ.பி.எல். போட்டியில் எழுந்துள்ள விவகாரங்கள் குறித்து உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீர்த்தி ஆசாத் கோரிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவ் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், கீர்த்தி ஆசாத் ஒரு முக்கிய பிரச்சினையை எழுப்பி இருக்கிறார். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.எல். போட்டி ஒரு நாடகம்தான். இது இந்தியக் கலாசாரத்தை சீரழிக்கிறது என கூறினார்.

No comments:
Post a Comment