சட்டசபையில் சிறைத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஜெயில் கைதிகளுக்கு அசைவ உணவு சாப்பிடும் அனைவருக்கும் வாரம் ஒருமுறை 115 கிராம் கோழி இறைச்சியும், சைவ உணவு சாப்பிடும் கைதிகளுக்கு வாரம் ஒருமுறை உருளைகிழங்கு கறி, கேசரி, 1 வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
நோய் வாய்ப்பட்ட கைதிகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் மருத்துவ உணவாக பால், ரொட்டி, முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. ஜெயிலில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் நல்ல உணவு கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.
சுத்தத்தை உறுதிப்படுத்த கைதிகளுக்கு எவர்சில்வர் தட்டு, குவளை வழங்கப்படுவதோடு எவர்சில்வர் சமையல் பாத்திரங்களும் அங்கு வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி கைதிகளுக்கு கூடுதலாக பால் வழங்கப்படுகிறது. ஆடைகள் மற்றும் படுக்கைகள் சிறை நடைமுறை புத்தகத்தில் உள்ள விதிப்படி வழங்கப்படுகிறது.
தண்டனை கைதிகளுக்கு டெரிகாட்டன் சட்டை, அரைக்கால் சட்டைகள், பெரிய தரை விரிப்புகள் வழங்கப்படுகிறது. புதிதாக ஜெயிலுக்கு செல்லும் விசாரணை கைதிகளுக்கும் போதிய உடைகள் வழங்கப்படுகிறது.
மத்திய சிறை, சப்-ஜெயில்களில் அடிப்படை வசதிகளும் துப்புரவு வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படுகிறது. ஜெயிலில் உள்ள ‘ஆ’ வகுப்பு தண்டனை கைதிகளுக்கான சீருடையை அரைக்கால் சட்டையில் இருந்து முக்கால் சட்டையாக மாற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயிலில் தண்டனை கைதிகள் வேலை பார்க்கும்போது ஒரு நாளைக்கு ரூ..60, ரூ.50, ரூ.45 என வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது இதை ரூ.100, ரூ.80, ரூ.60 ஆக வகைப்படுத்தி வழங்கப்படுகிறது. ஜெயிலில் மொத்தம் 2374 தண்டனை கைதிகள் பட்டப்படிப்பு, இலக்கியப்படிப்பு, கம்ப்யூட்டர் படிப்பு உள்பட பல்வேறு படிப்புகளை படிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment