புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment