பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பங்குச் சந்தை வர்த்தகத்தில் நுழைந்த ஃபேஸ்புக்கிற்கு,முதல் நாள் வர்த்தகமே ஏமாற்றமாக அமைந்தது முதலீட்டாளர்களை அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,பங்குச் சந்தையில் நுழையப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தபோது,முதலீட்டாளர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து 38 அமெரிக்க டாலர் முக மதிப்பில் ஃபேஸ்புக் பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில்,அப்பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டால் நாமும் மில்லினாதிபதிதான் (அதாங்க...நாம லட்சாதிபதின்னு சொல்வோமே...!) என்ற நம்பிக்கை ப்ளஸ் எதிர்பார்ப்பில்,அமெரிக்காவின் வழக்கமான தொழில்முறை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது,கையில் காசு பணம் தாராளமாக புழங்கக்கூடிய மேல்தட்டு அமெரிக்க குடிம்கன்கள் கூட,(நம்ம ஊரில் புறநகர் பக்கம் கிரவுண்ட் 10,000 ரூபாதான் என்று கூவி கூவி விற்பவர்களிடம்,வாங்கிப்போட்டால் கிடக்கிறது என்று வாங்கிப்போடுவோமே...?அதே பாணியில்!) ஃபேஸ்புக் பங்குகளையும் அடித்துப்பிடித்து வாங்கி போட்டனர்.
இந்நிலையில்தான்,ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ப்ளஸ் முஸ்தீப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில்,வெள்ளியன்று பங்கு பரிவர்த்தனை வர்த்தகத்தில் நுழைந்தது ஃபேஸ்புக்!
காலை 11.32 மணிக்கு ஃபேஸ்புக் பங்குகள் வர்த்தகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும்,42.05 டாலராக உயர்ந்த அதன் மதிப்பு,அடுத்த சில நிமிடங்களிலேயே 38.01 டாலராக சரிந்தது.
பின்னர் வர்த்தகத்தின் இடையே 6 சதவீதம் உயர்ந்து 40.40 டாலராக உச்சம் தொட்ட அதன் மதிப்பு,தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கவில்லை.
அன்றைய வர்த்தகத்தில் ஃபேஸ்புக்கின் 500 மில்லியனுக்கும் அதிமான பங்குகள் கைமாறியபோதிலும்,வர்த்தகம் முடிவடையும்போது எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,வெறும் 0.23 சதவீத உயர்வுடன்,அதாவது 38.23 டாலரிலேயே நின்றுபோனது அதன் பங்கு மதிப்பு.
இது ஃபேஸ்புக் மீது அபார நம்பிக்கை வைத்து பங்குகளை வாங்கிய அதன் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியும்,ஏமாற்றம் அளிப்பதாகவுமே இருந்தது.
ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு 105 பில்லியன் டாலர்.இது அமேசான் டாட் காம், மெக்டெனால்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகமாகும்.ஆனால் அந்த நிறுவனங்களை காட்டிலும் அதிக பிரபலமான ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்புகள்,ப்ங்குச் சந்தையில் அவ்வளவாக விலைபோகாதது முதலீட்டாளர்களை மட்டுமல்லாது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கே வியப்பையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர்கள்,”ஆரம்ப எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஃபேஸ்புக்கின் பங்கு விற்பனை அமையாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது என்பது உண்மைதான் என்றாலும்,இதை தோல்வி என்று கருதத் தேவை இல்லை” கூறுகிறார்கள்.
அதே சமயம் ஃபேஸ்புக், தான் வெளியிட்ட பங்குகளில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு கொண்டு வந்துள்ளது.மீதமுள்ள ப்ங்குகளில் பெரும்பாலானவை முதலீட்டு வங்கிகள் மூலமாகவே விற்பனையாகிக் கொண்டிருப்பதால், எதிர்கால சேமிப்பாக கருதி,அதனை வாங்கிப்போடலாம் என்று நினைக்கும் தொழில்முறை அல்லாத மற்றும் இடைத்தரகு முதலீட்டாளர்கள் மத்தியில்,பங்குச் சந்தையில் கிடைத்த ஏமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால்,ஃபேஸ்புக் நிறுவனம் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளது.
உலக பிரச்னைகளுக்கெல்லாம் தனது தளத்தின் வாயிலாக தீர்வு சொல்லிக்கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கிற்கும்,அதன் பங்கு மதிப்பு உயர ஏதாவது வழி சொல்லுங்களேன்...!

No comments:
Post a Comment