நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ் தன் தாயாருடன் பலியானார். அவர் ரஸ்னா விளம்பரத்திலும், அமிதாப்புடன் பா என்ற இந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்.
அந்த குழந்தை நட்சத்திரம் வெற்றிச்செல்வன் என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார்.
நேபாளத்தில் பக்தி சுற்றுலா சென்ற 21 பேர் பயணம் செய்த விமானம் மலையில் மோதி, விழுந்து நொறுங்கியது. அதில், 4 தமிழர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பலியானவர்களில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் ஒருவர்.
ரஸ்னா விளம்பரம், பா இந்திப் படம் தவிர, 'வெள்ளி நட்சத்திரம்', சத்யம் போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் குரோர்பதி வினாடி வினா டி.வி. நிகழ்ச்சியிலும் தருணி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படம் 'வெற்றிச் செல்வன்'
அதைத் தொடர்ந்து, `வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் ஒப்பந்தமானார். இந்த படத்தை ருத்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தருணி சச்தேவ் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் ருத்ரன் கூறுகையில், "தருணி சச்தேவ், சிறிய குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். என்னுடைய விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதை வைத்துதான் 'வெற்றிச்செல்வன்' படத்தில், கதாநாயகிக்கு தங்கையாக அவரை ஒப்பந்தம் செய்தேன். மிக திறமையான குழந்தை நட்சத்திரம் அவர். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன்.
கோடை விடுமுறையை கழிப்பதற்காக தருணி சச்தேவ் தனது தாயாருடன் நேபாளம் போவதாக, என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார். அவர் சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி முதல் ஊட்டியில் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொன்னார்.
ஆனால், தருணி சச்தேவ் தன் தாயாருடன் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கப்போவதில்லை. அப்படியே பயன்படுத்தப் போகிறேன்,'' என்றார்.
அமிதாப்பச்சன் அதிர்ச்சி
நடிகை தருணி சச்தேவின் திடீர் மரணம் அமிதாப்பச்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கடவுளே இந்த துயரமான செய்தி உண்மையாக இருக்கக்கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தருணியின் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து இருக்கிறார்.
காட்மாண்டில் உடல்கள்
விபத்தில் பலியான 15 பேரில், 13 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனைக்குப்பின் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment