கிருஷ்ணா நாயகனாக நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கியவர் சத்யசிவா. இப்படம் சமீபத்தில் ரிலீசானது. சத்யசிவா தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக மணப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிவரஞ்சனி ‘கழுகு’ படத்தை தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒன்றாக சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் சத்யசிவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் சிவரஞ்சினியை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவரஞ்சனி கூறியதாவது:-
தயாரிப்பாளர் பட்டியல் சேகர் அலுவலகத்தில் பணியாற்றியபோது ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவாவை சந்தித்தேன். என்னிடம் வலிய வந்து காதலிப்பதாக கூறினார். நான் ஏற்கவில்லை. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கட்டத்தில் அவர் நீ காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று கூறி மொட்டை மாடியில் நின்று கொண்டு மிரட்டினார்.
ஒருமுறை தூக்கில் தொங்கப் போவதாக கூறி துப்பாட்டாவை கழுத்தில் மாட்டினார். இப்படி சினிமாவில் வருவதுபோல செய்து காட்டி என்னை மயக்கி விட்டார். என்னை தீவிரமாக காதலிப்பதாக நம்பி நானும் காதலிக்க துவங்கினேன். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அவரது பெற்றோரிடம் அழைத்து போய் அறிமுகப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் அதன்படி செய்யவில்லை.
திடீரென என்னை புறக்கணிக்க துவங்கினார். வேறு பெண்களுடன் சுற்றுவதாக அறிந்தேன். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டேன். எனக்கு துரோகம் செய்த சத்யசிவா தண்டிக்கப்பட வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவரஞ்சினியின் வீடு மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கத்தில் உள்ளது. இதையடுத்து அவரது புகார் மனு மாங்காடு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவரஞ்சினியை அழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த விசாரணை குமணன்சாவடி மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

No comments:
Post a Comment