புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடவுள்ளது. இங்கு திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் ஜூன் 12ம் தேதி நடக்கிறது. கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துக்குமரன், திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசைவிட 3,101 ஓட்டுகள் அதிகம் வாங்கி வென்றார்.
இம்முறை அதிமுக வேட்பாளராக புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் கார்த்திக் தொண்டைமானை முதல்வர் ஜெயலலிதா நிறுத்தியுள்ளார்.
என்ன காரணமோ தெரியவில்லை, இங்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது என்று தா.பாண்டியன் அறிவித்துவிட்டார். ஒருவேளை அதிமுக வெற்றிக்கு இடைஞ்சலாக இருக்க அவர் விரும்பவில்லையோ என்னவோ.
இந் நிலையில் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை ஆலோசனை நடந்தது.
அதில் புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற பெரியண்ணன் அரசுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என சில நிர்வாகிகள் வற்புறுத்தினர்.
இடைத்தேர்தலை சந்திக்க அதிக செல்வாக்கும் பண பலமும் உள்ள வேட்பாளர் வேண்டும் என்பதால், ரகுபதியை நிறுத்தலாம் என்றும் சில நிர்வாகிகள் கூறினார்கள்.
பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்றும் யோசனை கூறப்பட்டதாகத் தெரிகிறது.
நீண்ட நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் டெபாசிட்டை திமுக இழந்தது. அதுபோன்ற நிலை புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் வந்துவிடக்கூடாது என்று திமுக தலைமை கருதுகிறது.
தென் மாவட்டங்களுக்கு அருகில் இருந்தாலும் இது திமுக தென் மண்டலச் செயலாளர் மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை இல்லை. பொருளாளர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ளது மாவட்டம் இது.
இதனால் எப்படியும் சங்கரன்கோவிலைவிட அதிக வாக்குகள் பெற்று கருணாநிதியிடம் நல்ல பெயர் வாங்க ஸ்டாலின் விரும்புகிறாராம். இதனால் வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள். மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகிய இருவருமே ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் நேற்றைய இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், திமுகவில் இன்னும் விருப்ப மனுக்கள்கூட பெறப்படவில்லை. இதனால் திமுகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். எனினும், ஓரிரு நாள்களில் விருப்ப மனுக்கள் பெற்று, நேர்க்காணல் நடத்தி, வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஸ்டாலின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் 2 தினங்களில் மு.க.ஸ்டாலின் குணம் அடைந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதன் பிறகு புதுக்கோட்டை வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.
பெரும்பாலும் பெரியணண்னனுக்கே வாய்ப்பு கிடைக்கலாம்.
No comments:
Post a Comment