சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ). குணசேகரன் (இந்திய கம்யூ), ஆகியோர் காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில தினங்களாக அதிகமானதால் மின் வெட்டு குறைந்துள்ளது.
ஆனால் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பெற அடிப்படை வசதி இல்லை. எனவே காற்றாலை உற்பத்தியாளர்களிடம் காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று கூறியதாக செய்தி வெளியாகியுள்ளதே? இதில் உள்ள உண்மையை அமைச்சர் விளக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:-
இந்த தகவல் முற்றிலும் தவறானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் மின்வெட்டு குறைந்து விட்டதாக உறுப்பினர்களே கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தும்படி வெளியான செய்தியில் எப்படி உண்மை இருக்கும்.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் நிறுவுத் திறன் 6696 மெகாவாட் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்தியாவிலேயே காற்றாலை நிறுவியதில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் 42 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மூலம் முழுமையாக 6696 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யமுடியாது. அதிகபட்சமாக 3 ஆயிரம் முதல் 3200 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி ஆகும்.
கடந்த இரண்டு, மூன்று தினங்களாக 1540 முதல் 2100 மெகாவாட் மின்சாரம் வரை காற்றாலை மூலம் உற்பத்தி யாகிறது. இந்த மின்சாரம் முழுவதையும் பெற தேவையான கட்டமைப்பு உள்ளது.
எனவே உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தியை நிறுத்துங்கள் என்று தனியாருக்கு உத்தரவு போடவும் முடியாது. 3 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய காற்றாலைகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை. தற்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் தனியார் மூலம் 400 மற்றும் 230 கிலோ வாட் மின் நிலையங்கள் தனியார் மூலம் அமைக்கப்படுகிறது.
இதற்கு ஆகும் செலவு மின்சார வாரியம் மூலம் வட்டி இல்லாத கடனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமான காற்றாலை மின்சாரத்தையும் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment