இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கில் இருந்து இலங்கை ராணுவத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இறுதிப் போர் முடிவடைந்து 3-ம் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது:
இலங்கையின் வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நாள் ஒரு பொன்நாள். 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்திய நாள் இன்று.
யுத்தத்தில் தங்களது உயிர்களையும் உடல் உறுப்புக்களையும் இழந்த படையினரை நாம் கௌரவிக்க வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருந்த போது அதனை முற்றாக ஒழிக்கும் பெரும் பொறுப்பு படையினருக்கு இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடு என்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவு காணப்படுகின்றது. அன்று யுத்தத்தை முற்றாக ஒழிக்க உதவிய நாடுகள், இன்று இலங்கையை அபிவிருத்திக்கும் உதவுகின்றன.
விடுதலைப் புலி ஆதரவு சக்திகள் யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமானது. அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்களுக்கு சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவது தெரியவில்லையா? அவற்றை தடுக்க என்ன செய்தார்கள்? என்றார் அவர்.

No comments:
Post a Comment