ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக இந்த தடவை பெண்கள் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் 51 கிலோ, 60 கிலோ, 75 கிலோ ஆகிய மூன்று எடை பிரிவு இடம் பெறுகிறது.
ஒலிம்பிக் தகுதிக்கான பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குன்ஹூவாங்டாவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் உலகின் 2-ம் நிலை வீராங்கனை நிகோலா ஆடம்சிடம் (இங்கிலாந்து) 13-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்ட 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் அதிர்ஷ்ட வாய்ப்பில் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேரிகோம் வயது பிரிவில் ஆசிய கண்டனத்தினருக்கான 2 இடத்தில் ஒரு இடத்தை இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரும், ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ரென் கேன்கேன் (சீனா) பெற்றுவிட்டார். இன்னொரு இடத்துக்கான வாய்ப்புக்கு கால் இறுதியில் தோல்வி கண்ட மேரிகோம் (இந்தியா), ஹி கிம் (வடகொரியா) ஆகியோர் காத்து இருந்தனர்.
நேற்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் மேரி கோமை கால் இறுதியில் வீழ்த்தி இருந்த நிகோலா ஆடம் 11-6 என்ற புள்ளி கணக்கில் ஹி கிம்மை வென்று இருந்த ரஷியாவின் எலீனா சவெல்யேவாவை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆசிய கண்டத்தினருக்கான 2-வது இடத்தை மேரிகோம் பெற்று லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். நிகோலா ஆடம் தோல்வி கண்டு இருந்தால் மேரிகோமுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்காது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான 29 வயது மேரிகோம் கூறுகையில், கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் இடம் கிடைத்து விட்டது. எனவே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
உலக போட்டியில் பதக்கம் இல்லாமல் முதல்முறையாக திரும்புவது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 81 கிலோவுக்கு மேற்பட்ட உடல் எடைப்பிரிவில் கால் இறுதியில் இந்திய வீராங்கனை கவிதா சகால் 15-14 என்ற புள்ளி கணக்கில் துருக்கி வீராங்கனை செம்சி யாராலியை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

No comments:
Post a Comment