ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்று பாஜக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அப்துல் கலாமை பாஜக அரசு தான் ஜனாதிபதியாக்கியது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அவர் மீண்டும் ஜனாதிபதியாகாமல் தடுத்தது. வெளிநாட்டவர் என்பதால் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்ததால் கலாமை காங்கிரஸ் ஓரங்கட்டியது.
இந் நிலையில் மீண்டும் கலாமை ஜனாதிபதியாக்கத் தயார் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் எங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்க நாங்கள் தயார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் எவரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்பதால் அவர்களை ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை. துணை ஜனாதிபதி பதவிக்கு எங்களது வேட்பாளரை நிறுத்திவிட்டு, அதற்கு கைமாறாக காங்கிரஸ் நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை.
நாங்கள் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைக்கான தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம். எனவே, காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு உள்ளது போன்ற தோற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை.
அதே நேரத்தில் எங்களுக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. அதன்படி அவர்களது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவும், எங்களது துணை ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது. நாங்கள் வெற்றிபெறும் நோக்கத்துடன் போட்டியிடுவோம். வெற்றிபெற எத்தனை வாக்குகள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுத் தீர்மானிப்போம் என்றார்.
வேட்பாளர் யார்? கூற மறுக்கும் பாஜக:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு பதிலளிக்க சுஷ்மா மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment