சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த 21-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் சிறைகளில் உள்ள 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடன் சமரச பேச்சு நடத்துவதற்காக சத்தீஸ்கர் மாநில முதல்- மந்திரி ராமன்சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சார்பில் பேச ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி.சர்மா, ஐதராபாத் பேராசிரியர் ஹர் கோபால் இருவரும் தேர்வானார்கள். அவர்கள் காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளுடன் பேசினார்கள். முதல் 3 சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சனிக்கிழமை அவர்கள் மீண்டும் மாவோயிஸ்டுகளை சந்தித்து பேசினார்கள். நேற்று ராய்ப்பூர் திரும்பிய அவர்கள் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான 5 பேர் குழுவிடம் பேச்சு நடத்தினார்கள். ராமன்சிங் வீட்டில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அந்த உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது 2 பக்க பத்திரமாக தயாரிக்கப்பட்டது. அந்த பத்திரத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். 2-ந்தேதிக்குள் அவர் பத்திரமாக வந்து சேர்வார் என்று மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்கும் உறுதி செய்தார். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றிரவு அல்லது நாளை அதிகாலை அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளின் இந்த முடிவால் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 17 பேரை விடுதலை செய்தால்தான் கலெக்டரை விடுவிப்போம் என்று கூறி வந்த மாவோயிஸ்டுகள் மனம் மாறியது ஏன் என்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன.
கலெக்டர் அலெக்சை கடத்தியது மாவோயிஸ்டு மூத்த தலைவர்களில் சிலருக்கு பிடிக்கவில்லையாம். மாவோயிஸ்டுகளுக்கு கிராம மக்களிடம் உள்ள இமேஜை கலெக்டர் கடத்தல் விவகாரம் பாழ்படுத்தி விடும் என்று அவர்கள் எச்சரித்தார்களாம். இதையடுத்தே கலெக்டரை விடுவிக்க, மாவோயிஸ்டுகள் முன் வந்ததாக கூறப்படுகிறது. வெறுமனே விடக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகள் பற்றி ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
இந்த கோரிக்கையை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன்சிங் ஏற்றுக் கொண்டார். கலெக்டர் விடுவிக்கப்பட்ட உடனேயே இந்த உயர் மட்டக்குழு அமைக்கப்படும். அவர்கள் மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான வழக்குகளை ஆய்வு செய்து விரைவில் விடுதலையாக உதவு வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறைகளில் உள்ள மாவோயிஸ்டுகள் யாரும் விடுதலை செய்யப்படாமலேயே கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மீட்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment