ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில் அதிபர் ஷாகித் பல்வா, பட அதிபர் கரீம் மொரானி மற்றும் தனியார் டெலிபோன் நிறுவன உயர் அதிகாரிகள் அனைவரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பு ஒவ்வொருவராக ஜாமீனில் விடுதலையாகி திகார் ஜெயிலை விட்டு வெளியே வந்தனர்.
ஆனால் ஆ.ராசா மட்டும் ஜாமீனில் விடுதலையாக மறுத்து விட்டார். ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணைக்காக அவர் தினமும் திகார் ஜெயிலில் இருந்து போலீஸ் வேனில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப் பட்டு வந்தார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனால் ஆ.ராசா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லி கோர்ட்டுக்கு வந்திருந்த ராசா ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். ராசா கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
கோர்ட்டு மற்றும் ஜெயில் நடைமுறை முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு ராசா திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அவரை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு வரவேற்று அழைத்து வந்தார். அப்போது ஜெயில் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பின்னர் ராசா ஜெயில் வாசலில் இருந்து காரில் ஏறி நேராக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசலில் அவரை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக ராசா விடுதலையானதால் அவரது மனைவி பரமேஸ்வரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோர்ட்டுக்கு வந்திருந்த அவர் ஜாமீன் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றார். ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்று தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ஆ.ராசா விடுதலையானதால் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப் தும் தி.மு.க.வில் தீவிரமாக இருப்பவர். கட்சியில் எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம் என்றார்.எனவே ராசா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று தெரிகிறது.
ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். சிறையில் இருந்த போதும் அவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். ராசா கைதான போது தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கூடி அவருக்கு முழு ஆதரவு தெரிவித்தது.தி.மு.க. எப்போதும் ராசாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோர்ட்டு அனுமதியின்றி ராசா தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் ராசா டெல்லியிலேயே தங்கி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து டெல்லியை விட்டு வெளியே வரலாம்.ஏற்கனவே கனிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலையானதும் மீண்டும் அரசியலில் கவனம் செலுத்தினார். கட்சி கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். அவரைப் போல் ஆ.ராசாவும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment