இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மேல்-சபை நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்ததுபோல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின், ‘நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்’ என்றார்.
இவ்வாறு கூறியதன் மூலம் சச்சின் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்திருக்கிறார்.
மேலும், ’கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்’ எனவும் சச்சின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment