2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜா.
இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. இந் நிலையில் ராசாவை விடுதலை செய்தால் அவர் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இந் நிலையில் இன்று நீதிபதி சைனி தனது தீர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment