ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாஜக சொல்லும் நபரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுமே வெளியில் நாடகம் போட்டாலும், உள்ளுக்குள் அவர்களிடையே 'டீல்' ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலும், ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது.
எல்லா கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் தவிர இந்தப் பதவிகளுக்கு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்பில்லை.
இந்த இரு பதவிகளுக்குமே யாரையும் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட பலம் மத்தியில் ஆளும் காங்கிரசுக்கோ, எதிர்க் கட்சியான பாஜகவுக்கோ இல்லை. கூட்டணிக் கட்சிகளும், நடுநிலையில் உள்ள முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் போன்றோரும் ஆதரித்தால் மட்டுமே காங்கிரசால் தனது வேட்பாளரை வெல்லச் செய்ய முடியும்.
அதே போல கூட்டணிக் கட்சிகளும் கூட்டணியில் இல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களும் ஆதரித்தாலும் கூட பாஜகவாலும் அவ்வளவு எளிதாக தனது வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட முடியாத நிலை உள்ளது.
இதனால் காங்கிரசுக்கு பாஜகவின் உதவியும், பாஜகவுக்கு காங்கிரசின் உதவியும் நிச்சயம் தேவை. இந்த உதவிகளை நேரடியாக செய்து கொண்டால் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அது பாஜகவுக்கு எதிரானதாக முடியும். பதவிக்காக காங்கிரசுடன் அந்தக் கட்சி கைகோர்த்ததாக பெயர் வந்துவிடும்.
இந்தப் பெயர் வந்துவிடாமல் தவிர்ப்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. இதனால் மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள காங்கிரசும் பாஜகவும் தயாராகி வருகின்றன.
இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி பதவிக்கு தனது வேட்பாளரையும், துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக சொல்லும் நபரையும் நிறுத்த காங்கிரஸ் முன் வந்துள்ளது. இதை பாஜகவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு சிரோன்மணி அகாலி தளம் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் பெயரை காங்கிரசிடம் பாஜக முன் வைத்துள்ளது.
இதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு பாஜக யாரையும் நிறுத்தாது, காங்கிரஸ் முன்மொழியும் வேட்பாளரை ஏற்கும் அல்லது எதிர்க்காமல் நடுநிலை வகிக்கலாம் என்று தெரிகிறது.
இதன்மூலம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்ற பெயரும் பாஜகவுக்குக் கிடைக்கும்.
காங்கிரஸை பொறுத்தவரை தான் நிறுத்தும் வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதனால் பாஜகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே எந்த டீலும் செய்து கொள்ள அந்தக் கட்சித் தயாராகவே உள்ளது.
நடுநிலை வகிக்கும் கட்சிகளில் முலாயம் சிங் யாதவையும், கூட்டணிக் கட்சிகளில் மம்தா பானர்ஜியையும் தனது வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், பிரச்சனையில்லாமல் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.
முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை கடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர உதவிய முஸ்லீம்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். கலாமுக்கு பதில் இன்னொரு இஸ்லாமியரான அன்சாரியை நிறுத்தி அவரை ஆதரிக்குமாறு காங்கிரஸ் கோரினால் அதை அவர் ஏற்பார் என்றே தெரிகிறது.
மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தர வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூறி வருகிறார். இந்த விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், அவர் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பார்.
No comments:
Post a Comment