இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா, விடுலைப்புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியவர். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சைவை எதிர்த்து நின்று தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அரசுக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து அவரது மனைவி அனோமாவை அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து அவரை விடுவிப்பதற்கு இலங்கை மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
எனவே இன்னும் சில நாட்களில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என அவரது மனைவி அனோமா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அவருக்கு இன்று கொழும்பில் உள்ள இலங்கை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிடுள்ளது.
ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பொன்சேகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment