நிலக்கரி சுரங்க முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்யக்கோரி, செப்டம்பர் 17-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மேலும் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தங்கள் போராட்டத்தின்போது பாரதீய ஜனதா கட்சி கோர உள்ளது.
இதுபற்றி பேசிய பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் அனந்த குமார், ‘பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி செப்டம்பர் 17 முதல் 24-ம் தேதி வரை நாங்கள் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்வோம். நிலக்கரி ஊழலில் முதல் மற்றும் முக்கியக் குற்றவாளியான பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்தே ஆகவேண்டும். போராட்டத்தின் ஒருபகுதியாக மாநிலத் தலைநகர்களிலுள்ள ராஜ்பவன்களை நோக்கி ‘ராஜ்பவன் சலோ’ என்னும் பேரணி நடக்கிறது. இதேபோல் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும்’ என்றார்.
நிலக்கரி ஊழல் உள்ளிட்ட காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக செப்டம்பர் 26-ம் தேதி பாரதீய ஜனதாவின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்.27 மற்றும் 28-ம் தேதிகளில் கட்சியின் தேசியக் குழு கூட்டம் அரியானா மாநிலம் சூரஜ்குந்த் நகரில் நடக்கிறது.
No comments:
Post a Comment