கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் நோய்களில் மூளையை செயலிழக்கச் செய்து உயிரைப் பறிக்கும் நோய் ஜப்பானிய மூளைக்காய்ச்சல். இதனை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் நடைமுறையில் இருந்தாலும் முற்றிலும் வராமல் தடுக்க மருந்துகள் இல்லை.
இந்நிலையில் இந்நோயைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முதல் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலாஜிக்கல் இ லிட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
ஜெ.இ.இ.வி. என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் விலை ரூ.985. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, விரைவில் விற்பனைக்கு வரும் என்று மருந்து நிறுவனத்தின் துணைத்தலைவர் மகிமா தத்லா தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் அதிக வீரியம் இல்லாமல், உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும் வீரியம் இல்லாத தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், இத்தகைய நேரடி தடுப்பூசியால் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன. எங்களது ஜெ.இ.இ.வி. தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் லைசென்ஸ் வழங்கியுள்ளது என்றும் மகிமா கூறினார்.
No comments:
Post a Comment