காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
அப்படியென்றால் காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் வசிப்போர் எல்லாம் பாவப்பட்டவர்களா அல்லது சாப்பிடாமல் செத்துப் போகட்டும் என்று காங்கிரஸ் கூற விரும்புகிறதா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment