காமெடியில் தனக்கென தனி பாணியில் நடித்து லட்சோபம் லட்சம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பிரபல நடிகர் லூஸ் மோகன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவரான மோகன், மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னைத் தமிழில் தனி பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவராவார்.
தனது கடைசிக்காலத்தில் பெரும் மன உளைச்சலுடன் வாழ்ந்த சோகக் கதை மோகனுடையது. அவருக்கு ஒரே மகன் கார்த்திக். லூஸ் மோகனை அவரது மகனும், மருமகளும் கடைசிக்காலத்தில் புறக்கணித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் காவல்துறை ஆணையரிடம் வந்து முறையிடும் அளவுக்குத் தள்ளப்பட்டார். (மகன் சாப்பாடு போட மறுக்கிறார் : நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்)
சாப்பாடு கூட கொடுக்க மறுக்கிறார் எனது மருமகள், அதை எனது மகன் தட்டிக் கேட்க மறுக்கிறார். ஒரு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில், மனிதாபிமானத்துடன் எனது மகன், மருமகள் கடைசிக்காலத்தில் என்னைக் கவனிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது லூஸ் மோகனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் வேதனைப்பட்டனர். அனைவரையும் சிரிக்க வைத்த லூஸ் மோகனுக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
சொந்த வீடு, சொத்து சுகத்துடன் இருந்தபோதிலும் கடைசிக்காலத்தில் பெரும் மனச் சுமை, வேதனையுடன் போய்ச் சேர்ந்துள்ளார் லூஸ் மோகன்.
தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களோடு இணைந்து ஒரு காலத்தில் காமெடியில் கலக்கியவர் லூஸ் மோகன். அவரது காமெடிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு நடித்து வந்தவர் லூஸ் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
லூஸ் மோகனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment