சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் டிவி நிறுவனங்களுக்கு அல்வாவை அப்படியே சாப்பிடுவது போல. அவரது படங்களை வாங்க கடும் போரே நடக்கும். அந்தப் போரில் பெரும்பாலும் சன் டிவிதான் இது காலம் வரை வென்று வந்தது. ஆனால் தற்போது திரையுலகில் உலா வரும் ஒரு செய்தி வியப்பளிப்பதாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுவதே அந்த செய்தியாகும்.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எந்தப் புதிய படம் எடுத்தாலும் அதை முதலில் சன் டிவிக்கு விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் பல தயாரிப்பாளர்கள். பலர் படத் தயாரிப்பின்போதே சன் பிக்சர்ஸிடம் விற்ற செய்திகளும் நிறைய வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. புதுப் படம் எதுவுமே சன்டிவிக்குப் போவதற்குத் தயங்குகிறதாம். காரணம் ஜெயா டிவி இப்போது பெரும் பணத்தைக் கொடுத்து புதுப் படங்களை வாங்கத் தயாராக இருப்பதால். அத்தோடு ஆட்சி வேறு ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாலும், தயாரிப்பாளர்கள் தரப்பு ஜெயா டிவிக்கே படங்களைக் கொடுக்க முன் வருகிறார்களாம்.
இதனால் சன் டிவிக்கு சமீப காலமாக புதுப் படங்கள் எதுவுமே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயா டிவியுடன் போட்டியிட விரும்பாததை ஒரு காரணமாகக் கூறினாலும், இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதாவது கோச்சடையான் ஒரு அனிமேஷன் படம் என்பதால்தான் சன் டிவி அதை வாங்கத் தயக்கம் காட்டியதாம்.
வழக்கமான ரஜினி படங்களுக்கும், இதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதை ரசிகர்கள் நிச்சயம் வேறுபட்ட படமாகத்தான் பார்ப்பார்கள். ஒரு முழு நீள ரஜினி படமாக இது இருக்க வாய்ப்பில்லை என்பது சன் டிவியின் கருத்தாம். இதனால்தான் கோச்சடையானை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.
முதலில் சன் டிவியைத்தான் கோச்சடையான் தயாரிப்புத் தரப்பு அணுகியதாம். ஆனால் அவர்கள்தான் விருப்பமில்லை என்று கூறி விட்டார்களாம். அதன் பிறகே ஜெயா டிவி வந்து கேட்டதாம். பெரும் விலை பேசி வியாபாராத்தை முடித்தார்களாம்.
No comments:
Post a Comment