இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை தொடர் இன்று துவங்கும் நிலையில், கடந்த 3 டுவென்டி20 உலக கோப்பை தொடர்களில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இதில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் இந்திய வீரர் யுவராஜ் சிங். மேலும் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டுவென்டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் டோணி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற 2009, 2011 ஆகிய இரு உலக கோப்பை தொடர்களில் இந்திய சாதிக்க தவறியது.
இந்த நிலையில் இலங்கையில் இன்று முதல் 4வது டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. கடந்த 2007 டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இருந்த கம்பிர், டோணி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ஷேவாக், பியூஸ் சாவ்லா ஆகிய 8 பேரும் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள 3 டுவென்டி20 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் சாதனைகள் குறித்து ஒரு கண்ணொட்டம் இதோ:
* டுவென்டி20 உலக கோப்பை தொடர் போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பதிவானது. அப்போட்டியில் 4 விக்கெட்களை இழந்த இந்திய அணி 218 ரன்களை குவித்தது.
* இதுவரை டுவென்டி20 உலக கோப்பை தொடரின் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்திருப்பவர்கள் பட்டியலில் இந்திய வீரர் கம்பிர் முதலிடத்தில் உள்ளார். இவர் 16 போட்டிகளில் பங்கேற்று 444 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல 51 பவுண்டரிகளை அடித்துள்ள அவர், உலக கோப்பையில் அதிக பவுண்டரிகளை அடித்த இந்தியர் ஆவார்.
* அதிக எண்ணிக்கையில் சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியலில் இந்திய வீரர் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 16 போட்டிகளில் பங்கேற்று 24 சிக்ஸ்களை அடித்துள்ளார்.
* உலக கோப்பை தொடரில் சதமடித்த ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தான். அவர் அதிகபட்சமாக 101 ரன்களை எடுத்துள்ளார்.
* உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் பங்கேற்ற இந்தியர்களின் பட்டியலில் டோணியும், ஹர்பஜன் சிங்கும் முதலிடத்தில் உள்ளார். இருவரும் இதுவரை 17 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
* டுவென்டி20 உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய வீரர்கள் யாரும் 5 விக்கெட்களை எடுத்தது இல்லை. ஆர்.பி.சிங் மற்றும் ஜாகிர்கான், ஓஜா ஆகியோர் தலா 4 விக்கெட்களை எடுத்துள்ளார். இதுவரை 14 விக்கெட்களை எடுத்துள்ள ஆர்.பி.சிங், அதிக விக்கெட்களை எடுத்த இந்தியர் ஆவார்.
* இந்திய வீரர்களில் அதிக முறை டக் அவுட்டான வீரர் ஆஷிஸ் நெஹ்ரா, 2 முறை.
* ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 7 சிக்ஸ்களை அவர் அடித்துள்ளார்.
* இதுவரை 12 பேரை அவுட்டாக்கி உள்ள இந்திய விக்கெட் கீப்பர் டோணி, அதிக விக்கெட்களை வீழ்த்த காரணமாக விக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
* கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் கம்பிர், ஷேவாக் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 136 ரன்களை சேர்த்தனர். இதுதான் இதுவரை அதிகபட்ச பார்ட்னர்ஷிப்.
* ஒரு உலக கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்தவர் பட்டியலில் இந்திய வீரர் கம்பிர் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பையில் 7 போட்டிகளில் 227 ரன்களை கம்பிர் குவித்தார்.
* டுவென்டி20 உலக கோப்பை தொடரிலேயே அதிக உதிரிகள் (எக்ஸ்ட்ரா) அளித்த அணி இந்தியா தான். கடந்த 2010ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 19 உதிரிகளை இந்தியா அளித்தது.
கடந்த 2007ம் ஆண்டு டுவென்டி20 உலக கோப்பையை வென்றது போல, இந்த ஆண்டும் இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment